சிங்கப்பூரர்களை ஈர்க்க புதிய இணையத்தளம் அறிமுகம்
பரந்த அனுபவம் கொண்ட திறனாளர்கள் பலரை ஈர்க்கும் தனது ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு, வேவுத்துறை முதன்முறையாக அதிகாரபூர்வ இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
தற்காப்பு அமைச்சின்கீழ் இயங்கும் பாதுகாப்பு, வேவுத்துறை அண்மைய ஆண்டுகளாகத் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
புவிசார் அரசியல் நிலைமைகளின் தாக்கத்தை மதிப்பிடுவது, பயங்கரவாதச் சதித்திட்டங்களை முறியடிப்பது, இணையத் தாக்குதல்கள், பொய்த்தகவல் பிரசாரங்கள் குறித்து அறிந்துகொள்வது போன்றவை அதன் பணிகளில் அடங்கும்.
பாதுகாப்பு, வேவுத்துறையின் நோக்கம், விழுமியங்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், தொழில்நுட்பம் முதல் செயல்பாடுகள், அனைத்துலகப் பங்காளித்துவம் வரையிலான ஐந்து துறைகளில் காணப்படும் வேலைகள் போன்றவை https://www.sid.gov.sg என்ற இணையத்தளத்தில் இடம்பெற்று உள்ளன.
பாதுகாப்பு, வேவுத்துறையின் முக்கியப் பணிகள், அது வழங்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்து அந்த இணையத்தளத்தின் வழியாக சிங்கப்பூரர்கள் நன்கு அறிந்துகொள்ளலாம் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர்த் திறனாளர்கள் ஆட்சேர்ப்பை மேம்படுத்த வேண்டிய தேவையே இந்த இணையத்தளம் உருவாக்கப்பட காரணம் என்று பாதுகாப்பு, வேவுத்துறையின் மூத்த இயக்குநர் மைக்கல் (புனைபெயர்) குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடுப்பு, புவிசார் அரசியல், இணையத் தாக்குதல் என சிங்கப்பூர் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் சிக்கல்மிக்கதாகி வருகின்றன என்று அவர் சொன்னார்.
"எங்களது வேலைகளைச் செய்ய பலதரப்பட்ட திறனாளர்கள் தேவைப்படுவதால் இடைப்பருவ வாழ்க்கைத்தொழிலர்களையும் ஈர்க்க விரும்புகிறோம்," என்றார் திரு மைக்கல்.
பொருளியலாளர்கள், வங்கியியலாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் பாதுகாப்பு, வேவுத்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1966ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு, வேவுத்துறையின் முன்னாள் இயக்குநர்களில் ஒருவராக மறைந்த அதிபர் எஸ்.ஆர்.நாதன் செயல்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ள வகைசெய்யும் தகவல்கள் பரந்த, பலதரப்பட்ட மூலங்களில் இருந்து வருகின்றன என்றும் அத்தகைய தரவுகளை உணர்ந்துகொள்ளப் பயன்படும் தொழில்நுட்பங்களும் விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்று பாதுகாப்பு, வேவுத்துறையின் பேச்சாளர் தெரிவித்து உள்ளார்.
"பாதுகாப்பு, வேவுத்துறையின் பார்வைத்தெளிவை அதிகப்படுத்த, எங்களது இலக்கை அடையப் பங்களிக்கக்கூடிய, சரியான விழுமியங்களையும் வல்லமையையும் கொண்ட, பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்களை ஈர்க்க இந்த இணையத்தளம் உதவும்," என்று அவர் கூறினார்.
ஆய்வு, செயல்பாடுகள், தொழில்நுட்பம், அனைத்துலகப் பங்காளித்துவம், கூட்டாண்மை ஆகிய ஐந்து முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆற்றிவரும் பொறுப்புகள் அந்த இணையத்தளத்தில் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன.

