குப்பைச் சேகரிப்பு வண்டிகளுக்கான மின்சார வாகன மின்னூட்ட மையம் துவாசில் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலக வாகனங்களின் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு அம்மையம் திறந்துவிடப்படும்.
கிளமென்டி-புக்கிட் மேரா, நகர்ப்பகுதி-பொங்கோல் வட்டாரங்களில் குப்பைகளையும் மறுசுழற்சிக் கழிவுகளையும் சேகரிப்பதற்காக இம்மாதத்தில் பல மின்சார வாகனங்களை செம்ப்கார்ப் நிறுவனம் அறிமுகம் செய்தது, அதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் புதிய மின்சார வாகன மின்னூட்ட மையத்தைத் திறந்துள்ளது.
செம்ப்வேஸ்ட் நிறுவனத்தால் இயக்கப்படும் குப்பைச் சேகரிப்பு வாகனங்களுக்கான மைய மின்னூட்டி நிலையமாக துவாஸ் மையம் செயல்படும்.
அம்மையத்தின் ஒரு பகுதி சூரிய ஆற்றலால் இயங்கும். அங்கு நான்கு மணி நேர விரைவு மின்னூட்டச் சுழற்சி முறையில், ஒரே நேரத்தில் 18 தொழிலக மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யலாம்.
துவாசில் உள்ள செம்ப்கார்ப் பணிமனையில் இடம்பெற்ற மின்னூட்டி மையத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், பசுமை வாகனங்களுக்கான ஊக்குவிப்பு முயற்சியில் செம்ப்கார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை குறிப்பிடத்தக்கது என்றார்.
சிங்கப்பூரில் ஓடும் வாகனங்களில் கனரக வாகனங்கள் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே இருந்தபோதும், கரிம வெளியிட்டீல் அவை கிட்டத்தட்ட பாதியளவிற்குக் காரணமாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
"மின்மயமாக்குவதன்மூலம், கார் போன்ற இலகு ரக வாகனங்களைக் காட்டிலும் கனரக வாகனங்களில் கரிம வெளியீடு வெகுவாகக் குறைகிறது," என்றார் திரு ஈஸ்வரன்.
இத்தகைய வணிகரீதியாக இயங்கும் வாகனங்களை மின்மயமாக்குவது, மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டக் கட்டமைப்பை அதிகரிப்பதை ஊக்குவிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

