கொண்டோமினியங்களிலும் தரைவீடு அல்லாத தனியார் வீடுகளிலும் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டிகளை நிறுவ மானியம் கேட்டு இம்மாதம் 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அந்த 'மின்சார வாகனப் பொது மின்னூட்டி மானியம்', தகுதியுள்ள குடியிருப்புகளில் மின்னூட்டக் கட்டமைப்பை உருவாக்க இலக்கு கொண்டுள்ளது.
இதன்மூலமாக, முன்கூட்டியே இம்முறைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக 2,000 மின்சார வாகன மின்னூட்டிகளை நிறுவுவதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் இணைநிதி வழங்கும்.
"சிங்கப்பூர்க் குடியிருப்புகளில் தரைவீடு அல்லாத தனியார் வீடுகள் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் நிலையில், அங்கு மின்னூட்டி வசதியை அதிகரிப்பது சிங்கப்பூரின் தேசிய மின்சார வாகன மின்னூட்டக் கட்டமைப்பின் பரப்பெல்லையை விரிவுபடுத்துவதில் முக்கியமான படியாகத் திகழும்," என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.
மானியத் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், தங்களது கார் நிறுத்தப் பூங்காக்கள் எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் தயாராக இருப்பதை உறுதிசெய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்படி கொண்டோமினியக் குடியிருப்பாளர்களை ஊக்குவித்தார்.
இந்த மானியத் திட்டத்தின்மூலம் 50% இணைநிதி வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு மின்னூட்டிக்கு $4,000 வழங்கப்படும்.
அந்த மின்னூட்டிகள், கண்காணிப்பது, மின்சாரப் பயன்பாட்டுத் தகவல்களுக்கேற்ப எதிர்வினையாற்றுவது என விவேக மின்னூட்ட வசதிகளைக் கொண்டு இருக்க வேண்டும்.
தரைவீடுகள், கடைவீடுகள், ஹோட்டல்கள், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் போன்றவற்றில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டிகளை நிறுவ இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற முடியாது.
ஆர்வமுடையோர் மேல்விவரங்களுக்கு ஆணையத்தின் இணையத்தளத்தை நாடலாம் அல்லது அரசாங்கத்தின் தொழில் மானிய இணையவாயில் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே, மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கடைத்தொகுதியின் ஒன்பதாம் தளத்தில் இருக்கும் கார் நிறுத்தப் பூங்காவில் மூன்று மின்சார வாகன மின்னூட்டிகளை நிறுவியுள்ளது. வரும் மாதங்களில் மேலும் பல மின்னூட்டிகளை அது நிறுவும்.

