தெமாசெக் ஆதரவுடன் கூடிய 'சென்ஸ்டைம்' எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம், அனைத்துலக செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்க மையத்தைச் சிங்கப்பூரில் தொடங்கி உள்ளது.
இங்கு செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களை வளர்க்கும்விதமாக, தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடனும் (ஐடிஇ) 'பிஸ்னஸ் சைனா' அமைப்புடனும் அந்நிறுவனம் நேற்று இரு புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டது.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடனான ஈராண்டு உடன்பாட்டின்படி, அந்நிறுவனம் தனது 'சென்ஸ்டடி' செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டத்தைக் கல்வியாளர்களுக்கு வழங்கும். 'மேம்படுத்தப்பட்ட தொழிலக இணைப்புத் திட்டத்தின்'கீழ் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள், 'சென்ஸ்டைம்' நிறுவனத்தின் பங்காளி அமைப்புகளில் திட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
அத்துடன், வாழ்நாள் கற்றல் மூலம் பெரியவர்கள் கணினி, அறிவார்ந்த நகரத் தீர்வுகள் தொடர்பில் சான்றிதழ் பெறவும் அந்நிறுவனம், தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து பணிபுரியும்.
'ஃபிரேசர்ஸ் டவர்' கட்டடத்தில் 246 சதுர மீட்டர் பரப்பளவில் அந்தப் புத்தாக்க மையம் அமைந்துள்ளது. அதே கட்டடத்தில்தான் 'சென்ஸ்டைம்' நிறுவனத்தின் வட்டாரத் தலைமையகம் அமைந்திருக்கிறது.
ஹாங்காங்கை மையமாகக் கொண்ட 'சென்ஸ்டைம்' நிறுவனம், கடந்த 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தனது வட்டாரத் தலைமையகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக, மூன்றாண்டுகளில் சிங்கப்பூரில் தன் ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த, அதாவது கிட்டத்தட்ட 300ஆக உயர்த்தத் திட்டமிட்டு வருகிறோம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் டாக்டர் ஸு கூறியதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது.

