குளிக்கும்போது படமெடுத்தார்; பல்கலைக்கழக மாணவர்க்குச் சிறை
பெண்கள் இருவர் குளிப்பதைப் படம்பிடித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்க்குப் பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாமாண்டில் பயிலும் ஜோனத்தன் அங்கா தர்மவான் ஜீ, 25, என்ற அம்மாணவர், ஒரு பெண்ணின் மானத்திற்கு இழுக்கு விளைவித்ததை கடந்த மாதம் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இப்போது அம்மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது. கடந்த 2019 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜோனத்தன், 25 மற்றும் 22 வயதான அப்பெண்கள் இருவரும் குளித்ததைத் தமது கைபேசி கொண்டு படம் பிடித்ததாகச் சொல்லப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதேபோன்ற குற்றம் நிகழ்ந்தது தெரிந்திருந்தும் ஜோனத்தன் அவ்வாறு நடந்து கொண்டதாக நீதிபதி சர்மிளா குறிப்பிட்டார். ஜோனத்தன் தமது சிறைவாசத்தை நேற்றில் இருந்தே தொடங்கிவிட்டார்.
சென்ற ஆண்டில் 133 வேலை மோசடிகள்
சென்ற ஆண்டில் 133 வேலை மோசடிச் சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் $220,000க்கும் கூடுதலான தொகையை இழந்தனர். முந்திய 2019ஆம் ஆண்டில் 36 வேலை மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், அவற்றின்மூலம் ஏறக்குறைய 72,000 வெள்ளி பறிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருந்ததால், வேலை தேடியோர் மோசடிக்கு இரையாகி இருக்கலாம் என்று 'ரேன்ஸ்டட் சிங்கப்பூர்' ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஜெயா தாஸ் குறிப்பிட்டார். வேலை விளம்பரங்களைக் கவனமாகப் படிக்கும்படி அவர் அறிவுறுத்தி இருக்கிறார். "பொதுவாக, மோசடிப் பேர்வழிகளின் ஆங்கில மொழியறிவு சிறப்பாக இருக்காது. அதனால், போலி விளம்பரங்களில் அச்சுப்பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருக்கும்," என்றார் திருவாட்டி ஜெயா. சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது ஆட்சேர்ப்பு முகவையை நேரில் தொடர்புகொண்டு வேலை விளம்பரம் உண்மையானதுதானா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். அத்துடன், MyCareersFuture மற்றும் நிறுவனங்களின் இணையப் பக்கங்களில் சென்று வேலை தேடுமாறும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
பெண் பயணியிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு
போதையில் இருந்த பெண் பயணியிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றதாக முன்னாள் கிராப் ஓட்டுநர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான டான் இயூ சின், 46, என்ற அந்த ஆடவர், அந்த 19 வயதுப் பெண்தான் முதலில் தம்மை முத்தமிடத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் கூறினார். அப்பெண்ணின் நண்பர் ஒருவரே டானின் கார் சேவையை நாடியதாகவும் போதையில் இருக்கும் தம் தோழியை வீட்டில் விட்டுவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் போதையில் இருந்ததாகத் தாம் நினைக்கவில்லை என்ற டான், 'அவர் தன்னுடன் உடலுறவு கொள்ள விரும்பியதாகத் தான் நினைத்ததாகவும்' தெரிவித்தார். ஆனால், அப்பெண் மிகுந்த போதையில் இருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அதிகாலை நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கு இம்மாதம் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

