கொவிட்-19 வேலையிட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உடன்படாத 66 நிறுவனங்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த 3,500க்கும் அதிகமான புகார்களை மனிதவள அமைச்சு பெற்றதை அடுத்து இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட தளர்வு நடவடிக்கை (உச்சக்கட்ட விழிப்பு நிலை) தொடங்கியது முதல் மனிதவள அமைச்சு இத்தகைய புகார்களைப் பெற்று வருகிறது. மே 16ஆம் தேதி முதல் முதலாளிகள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை செயல்படுத்த வேண்டியிருந்தது. வீட்டிலிருந்தே வேலை பார்க்க முடிந்தவர்கள் அவ்வாறே செய்ய வேண்டும்.
வீட்டில் பணியாற்ற முடிந்த பணியாளர்களை அவ்வாறு செய்ய விடாமல் இருக்கும் வேலையிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. தவறு செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது கடுமையான விதிமீறல்களைப் புரிந்த பட்சத்தில் செயல்படுவது நிறுத்தப்படலாம்.
முதல் முறை குற்றவாளிகள் மீது 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோர் மீது 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
அலுவலகத்தில் இருப்போர் தங்களுக்கு இடையே 1 மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு பணியாளர்களை நினைவுபடுத்த விரும்புகிறது.
வேலையிடத்தில் சமூக ஒன்றுகூடல்கள் அனுமதிக்கப்படமாட்டா. ஊழியர்கள் தங்களது சிற்றுண்டி இடைவேளைக்கு தனியாக, வெவ்வேறு நேரங்களில் செல்லவேண்டும். அத்துடன், உச்ச நேரங்களில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக பொது இடங்களில் பாதுகாப்பு இடைவெளிக்கான குறிகள் வைக்கப்படவேண்டும்.

