ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் கொவிட்-19 கிருமி நுழைய இந்தோனீசியா அல்லது இதர மீன்பிடிப் படகுகள் காரணமாக இருக்கக்கூடும் என்றும் இருந்தாலும் சிங்கப்பூரில் மீன்கள் பயன்படுத்த பாதுகாப்பானவை என்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
கெட்டுப்போன மீன்கள் மூலம் தொற்று ஏற்பட்டு இருக்கும் என்று கருதுவதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று இன்று நடந்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு மெய்நிகர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன்களைக் கொண்டு வந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த அல்லது இதர மீன்பிடிப் படகுகள் மூலம் அந்தத் துறைமுகத்தில் கிருமி நுழைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
துறைமுகத்தில் ஸ்டால் கடைகளை நடத்தும் மக்களுக்குப் படகுகளில் இருந்து எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னமும் துல்லியமாகத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பல்வேறு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்த பல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் அங்கு நிலவும் சூழ்நிலை, செயல்பாடுகளின் தன்மை ஆகியவை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முற்றிலும் நிலைநாட்டி வருவது மிகவும் சவாலாக இருக்கிறது என பேராசிரியர் மாக் தெரிவித்தார்.

