சிங்கப்பூரில் சென்ற வார முடிவில் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்ட 1,120 மீன் வியாபாரிகள் மற்றும் உதவியாளர்களில் 30 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இதுவரையில் 28 ஈரச் சந்தைகள் மற்றும் உணவங்காடிகள் ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவையாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான மீன் வியாபாரிகள் அவர்களின் உதவியாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம்.
அவர்கள் தங்கள் மீனை விற்க சமூகத்தை எட்டி இருப்பார்கள். மீன் வாங்கவும் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதால் சென்ற வார முடிவு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது என்பதை அமைச்சர் சுட்டினார்.
மீன் விற்பனையை நிறுத்தும்படி யும் பரிசோதனைக்கு உட்படும்படியும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் வியாபாரிகளுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் ஆலோசனை கூறி யதை அவர் நினைவுகூர்ந்தார்.

