ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கொலைச் சம்பவத்தால் தாம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகவும் அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றும் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டா்.
"மீளாத் துயரில் ஆழ்ந்துள்ள மாண்ட சிறுவனின் குடும்பத்தைப் பற்றி நினைக்கும்போது மனம் படபடக்கிறது. நேற்று அந்தச் சிறுவனை அவனது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். திடீரென்று, எவ்வித எச்சரிக்கையும் இன்றி அவன் உயிரிழந்துவிட்டான். சிறுவனின் குடும்பத்துக்கு நம்மால் ஆறுதல் கூற முடியாது.
"இருப்பினும், அவர்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
"ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த இருண்ட காலத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். கொலை தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான நோக்கத்தைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது.
"இந்தத் துயரச் சம்பவத்தைத் தடுத்திருக்கலாமா என்பது குறித்து ஆராயப்படுகிறது. விசாரணை முடிய காத்திருப்போம். வதந்திகளைப் பரப்பி ஏற்கெனவே சோகத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினரின் நிலையை மோசமாக்க வேண்டாம்.
"பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கான பாதுகாப்புக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் நலனுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
"கல்வியில் சிறப்பாகச் செயல்
படுவதில் மட்டுமே நமது கல்வி முறை கவனம் செலுத்தவில்லை. மகிழ்ச்சியான, அனைத்து சூழலுக்கும் ஏற்றவாறு நடந்துகொள்ளும் திறன் கொண்டவர்களாக வளர சிறுவர்களுக்கு நமது கல்வி முறை உதவுகிறது.
"தங்கள் நண்பர் மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தலைமையாசிரியர் அல்லது பள்ளி ஆலோசகரிடம் தெரிவிக்கவும். சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தாருடன் அவர்கள் ஒன்றிணைந்து தேவையான உதவிகளைச் செய்வர்," என்றார் திரு லீ.

