ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று 18,000க்கும் மேற்பட்டோர் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முந்திய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஹஜ்ஜுப் பெருநாள் அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டது.
முன்பு ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள 66 பள்ளிவாசல்களில் 66,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடினர். அது ஒவ்வொரு பள்ளிவாசலிலும் சராசரியாக 1,000 பேர் கூடினர்.
நேற்று பள்ளிவாசல்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடை
முறைப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் அல்லது கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டவர்களும் இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்காக 19 பள்ளிவாசல்களில் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 47 பள்ளிவாசல்களில் ஒரே இடத்தில் அதிகபட்சம் 50 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஹஜ்ஜுப் பெருநாளன்று பள்ளிவாசலில் இறை வழிபாட்டில் ஈடுபட இணையம் வழி முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவுச் சேவை கடந்த வெள்ளிக்
கிழமை தொடங்கியது.
முன்பதிவுச் சேவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே 750 இடங்களும் நிரப்பப்பட்டதாக பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள அல்-இஸ்திக்ஃபர் பள்ளிவாசலின் தலைவர் அஸ்மான் முகம்மது அரிஃபின் கூறினார்.
இப்பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு வழிபாடு மூன்று வெவ்வேறு நேரங்களில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நேரத்திலும் 250 பேர் அனுமதிக்கப்பட்டனர். வழிபாட்டில் ஈடுபட்டோர் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். இரண்டு பிரிவுகள் பெண்களுக்காக ஒதுப்பட்டன. ஐந்து பிரிவுகளுக்கும் தனித்தனி நுழைவாயில்களும், நடைபாதைகளும், கழிவறை வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வழிபாட்டு நேரமும் முடிந்த பிறகு அறைகள் சுத்தம் செய்யப்பட்டன. வழிபாடு தொடங்கும் நேரத்துக்கு 10லிருந்து 15 நிமிடங்கள் இருந்தபோது அதில் ஈடுபட பதிவு செய்தவர்கள் பள்ளிவாசல்களை அடைந்தனர். முன்பதிவு செய்ததற்கான ஆதாரத்தைக் காட்டிய பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் பாயை அவரவர் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

