பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹாங்காங்-சிங்கப்பூர் இடையிலான சிறப்பு இருவழிப் பயண ஏற்பாடு தற்போது தொடங்குவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக உலகெங்கும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில். சிங்கப்பூர்- ஹாங்காங் இடையே பயணிகளைத் தனிமைப்படுத்த தேவையில்லாத சிறப்பு இருவழிப் பயண ஏற்பாடுகளைத் தொடங்குவது குறித்து இருநாடுகளும் அடுத்த மாதம் மறுஆய்வு செய்ய இருக்கின்றன.
கொவிட்-19 சூழல் மேம்பட்டால்தால் சிங்கப்பூர்-ஹாங்காங் இடையிலான சிறப்பு இருவழிப் பயண ஏற்பாடு குறித்து கலந்துரையாடல்கள் தொடரும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் ஹாங்காங்கின் வர்த்தக, பொருளியல் மேம்பாட்டு அமைச்சர் எட்வர்ட் யாவும் அறிவித்துள்ளனர்.
"சிறப்பு இருவழிப் பயண ஏற்பாடு குறித்து இருநாடுகளும் மிக அணுக்கமாகச் செயல்படும். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கலந்துரையாடல்களுக்கு முன்பு இருநாடுகளிலும் நிலவும் பொது சுகாதார நிலை கண்காணிக்கப்படும்," என்று போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.
நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 182 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் 135 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகம், சந்தைகள், உணவு நிலையங்கள் ஆகிய குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்.

