ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் நினைத்துப் பார்க்கவே கடினமானது என்றும் கற்பனைக்கு எட்டாத துயரம் என்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தும் வாசகங்களை அவர் இன்று (ஜூலை 21) தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
"இவ்வாரத் தொடக்கத்தில் ரிவர் வேலி பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்ததை அறிந்ததும் ஆழ்ந்த துயருற்றேன். இளையர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும்கூட அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இச்செய்தி சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கக்கூடும்.
"அதேநேரம் சிலர் ஆதரவற்றதைப் போல உணர்ந்தும் குழப்பம் அடைந்தும் இருக்கக்கூடும். அத்தகையோரில் ஒருவராக நீங்கள் இருந்தால், நீங்கள் தனிப்பட்ட ஒருவர் இல்லை என்பதை உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உதவி நாடுவது என்பது பலவீனத்தின் அடையாளம் இல்லை. ஆதரவு வழங்கக்கூடிய பல குழுக்களும் அமைப்புகளும் உள்ளன.
"எனவே உங்களின் சிரமங்களை எதிர்த்து நீங்கள் தனியாகப் போராட வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம்," என்று அதிபர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

