ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் வோங் சியூ ஹூங் தெரிவித்துள்ளார்.
உயர்நிலை 1 மாணவர் மற்றும் அவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 16 வயது மாணவர் ஆகிய இருவரின் நெருங்கிய பள்ளித் தோழர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனவேதனையை அகற்றி உளவியல் சார்ந்த முதலுதவி வழங்க கல்வி அமைச்சின் நிபுணர்களும் பயிற்சி பெற்ற பள்ளி ஆலோசகர்களும் அப்பள்ளிக்கூடத்திற்குச் சென் றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் அறை ஒன்று தயார்ப்படுத்தப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறைக்குச் சென்று நிபுணர்களிடமும் ஆலோ சகர்களிடமும் உளவியல் ஆதரவைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆதரவு முயற்சி இன்றும் தொடர்ந்தது.
வார இறுதி வரை அவர்கள் அந்தப் பள்ளியில் இருப்பார்கள்.
மரண சம்பவத்திற்குப் பிறகு சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதைப் புரிந்து கொள்ள முடிவதாக திரு வோங் கூறினார்.

