மறுபடியும் முகக்கவசம் இல்லை; மேலும் ஒரு குற்றச்சாட்டு
பெருவிரைவு ரயிலுக்குள் முகக்கவசம் அணியாததாகச் சொல்லப்படும் பிரிட்டிஷ் ஆடவர் மீது, அரசு நீதிமன்றத்திற்கு வெளியே முகக்கவசம் அணியாததாக மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 40 வயது பென்ஜமின் கிலின் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இம்மாதம் இரண்டாம் தேதியன்று அவர் நீதிமன்றக் கட்டடத்தின் நுழைவாயிலில் முகக்கவசம் அணியாமல் வந்ததாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரி சொன்ன பிறகு அவர் முகக்கவசத்தை அணிந்ததாக நம்பப்படுகிறது.
பெருவிரைவு ரயிலில் முகக்கவசம் அணியாமல் இதர சில பயணிகளை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் காவல்துறையினரிடம் மிரட்டும் வகையில் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
கொவிட்-19 தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும், பிறரைத் தொந்தரவு செய்ததாக ஒரு குற்றச்சாட்டும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் கிலின் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று மாதத்திலிருந்து ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
உரிமமின்றி உடற்பிடிப்பு சேவை வழங்கியதாகக் குற்றச்சாட்டு
தகுந்த உரிமமின்றி அங் மோ கியோவில் உடல் பிடிப்பு சேவைகளை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் 53 வயது மாது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதியன்று அங் மோ கியோ காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் உரிமமின்றி உடல் பிடிப்பு சேவை வழங்கியது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது.
உடல் பிடிப்பு சேவை வழங்குதல் சட்டம் 2017ன் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதே குற்றத்தை மறுபடியும் புரிவோருக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை, 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தெரிந்தே உரிமம் இல்லாமல் உடல் பிடிப்பு சேவைகளை வழங்குவோருக்கும் தங்களின் இடத்தை வாடகைக்கு விடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை குறிப்பிட்டது. அவர்களுக்கும் அதே தண்டனை விதிக்கப்படலாம்.
சட்டவிரோத உடற்பிடிப்பு சேவை: ஆடவருக்கு அபராதம்
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தபோது 81 வயது ஆடவர் ஒருவர் உடல் பிடிப்பு சேவை வழங்கியிருக்கிறார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் வர்த்தகங்களுக்கு மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதி இருந்தது.
அப்போது தகுந்த உரிமமின்றி உடல் பிடிப்பு சேவை வழங்கியதாக ஒப்புக்கொண்ட டூ செங் சானுக்கு 18,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
தனது ஊழியர்களில் ஒருவர் பாலியல் சேவை வழங்காமல் பார்த்துக்கொள்ளத் தான் தவறியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கும்போது, கொவிட்-19 தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த இதர இரண்டு குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.
கொவிட்-19 காலத்தில் கூடிய எடை
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் பெரியவர்கள் பலருக்கு உடல் எடை கூடியதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. சிறுவர்களிடையிலும் அதே பிரச்சினை உள்ளதாகச் சில பொது மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
தான் கவனிக்கும் உடல் பருமன் பிரச்சினை உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, கொவிட்-19 சூழல் உருவானதற்குப் பிறகு 12 விழுக்காடு அதிகரித்ததாக கேகே மகளிர் சிறார் மருத்துவமனையின் ஒரு பிரிவு தெரிவித்தது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையிலும் அத்தகைய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கிருமிப் பரவல் சூழலால் குறைந்துபோன அல்லது முற்றிலும் நிறுத்தப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகள் உள்ளிட்டவை அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
பிரச்சினையைக் கையாள சிறுவர்களை ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கையாளச் செய்யவேண்டும். அதற்குப் பெற்றோர் முன்னுதாரணமாக விளங்கலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

