'இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கு கேடிவி குழுமத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பல்ல'

'இரண்டாம் கட்ட நடவடிக்கைக்கு கேடிவி குழுமத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பல்ல'

2 mins read
dedbf04f-d6ef-41ac-82f6-b403e509d4bc
-

கேடிவி கேளிக்கைக்கூடங்களுடன் தொடர்புடையோரின் பொறுப்பற்ற போக்கு தற்போதைய இரண்டாம் கட்ட பாதுகாப்பு நிலைக்குக் கராணமல்ல என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்தார்.

மற்றவர்களைப் போல தாமும் அவர்களின் செயலுக்காக வருத்தமடைவதாக திரு ஓங், நேற்று வெளியிட்ட தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். ஆயினும், வலுவான கட்டுப்பாடுகளுடன் உணவுக் கடைகளில் ஐந்து பேர் வரை உண்பதற்கு அனுமதி வழங்கியே கேடிவி கிருமித்தொற்றுக்குழுமத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கொவிட்-19 கிருமிப்பரவலை எதிர்கொள்ளும் அமைச்சர்நிலை பணிக்குழு நினைத்ததாக திரு ஓங் தெரிவித்தார்.

அமைச்சர்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவராகப் பணியாற்றும் திரு ஓங், முந்தைய காலக்கட்ட நடவடிக்கைகளுக்குத் திரும்பியதற்கான காரணங்கள் என்ன என்றும் ஒருசிலர் செய்த தவறுகளுக்காக அனைவருமே விளைவுகளை அனுபவிக்கவேண்டுமா என்றும் வாட்ஸ்அப்பில் உள்ள தமது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் வினவியதாகக் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களில் கேடிவி குழுமத்தில் ஏற்பட்டுள்ள கிருமித்தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தக் குழுமத்தில் மொத்தம் 215 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. புதன்கிழமையன்று எட்டு சம்பவங்கள் புதிதாக பதிவாகியுள்ளன.

இரண்டாம் பாதுகாப்பு கட்டத்திற்கு திரும்பியதற்குக் காரணம் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமம் என்று திரு ஓங் தெரிவித்தார்.

" துரதிஷ்டவசமாக, நேர்மையான முறையில் பிழைப்பை நடத்துக்கொண்டிருந்த மீன்கடைக்காரர்களும் கடை உதவியாளர்களும் துறைமுகத்தில் கிருமித்தொற்றுக்கு உள்ளாகினர். பல்வேறு சந்தைகளுக்கு அவர்கள் செல்கையில் சமூகத்தில் மேலும் பல கிருமித்தொற்றுகள் ஏற்பட்டன," என்று அவர் கூறினார்.

இன்னும் எந்தத் தடுப்பூசியும் போடாத மூத்தோர் பலர் சந்தைகளுக்குச் செல்வதாக அவர் தெரிவித்தார்.

"இதுதான் அதிக கவலையை அளிக்கக்கூடியது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கிருமித்தொற்றுகள் கூடும் அபாயத்தை நாம் எதிர்நோக்குகிறோம்," என்று அவர் எச்சரித்தார். "எனவே நாம் முன்கூட்டியே சமூக நடவடிக்கைகளைக் கடுமைப்படுத்தவேண்டும்," என்று அவர் கூறினார்.

உணவுக்கடைகளில் இதுவரை கிருமித்தொற்று இல்லாத பட்சத்தில் அதை மட்டும் நிறுத்தி வைப்பது ஏன் என்பது குறித்து திரு ஓங் குறிப்பிட்டார். ஐந்து பேர் ஒன்றாக சந்தித்தாலே கிருமி பரவுவதற்கு 125 இணைப்புகளைக் கொண்ட கட்டமைப்பு உருவாகிறது என்று திரு ஓங் தமது பதிவில் சுட்டினார். "இது ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமத்தை மிக வேகமாகப் பெருக்கிவிடும்," என்றார் அவர்.

மக்களில் 50 விழுக்காட்டினர் ஏற்கெனவே தங்களது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டதாக திரு ஓங் சுட்டினார்.