சிங்கப்பூரின் கடலுணவு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறுகியகால பாதிப்பைத் தணிக்க தங்களது கடலுணவுத் தெரிவுகளை விரிவுபடுத்துமாறு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாற்று ஏற்பாடுகள் மூலம் கடலுணவை வரவழைக்க சிங்கப்பூர் மீன் வர்த்தகர் பொதுச் சங்கம், மொத்த வியாபாரிகள் ஆகியோருடன் இணைந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு பணியாற்றி வருவதாக அவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
ஜூரோங் கோல்ட் ஸ்டோர் வளாகத்திற்கு வருகை புரிந்த பிறகு பேசிய அமைச்சர் ஃபூ, "மாற்று விநியோக மையங்களை அமைப்பது பற்றி நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பிரதான பேரங்காடிகள் அவற்றிடம் இருக்கும் இருப்பை அதிகரித்து வருகின்றன.
"எனவே அவற்றின் கடைகளில் போதிய அளவில் கடல் உணவு விநியோகம் உள்ளது," என்று கூறினார்.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவெடுத்ததைத் தொடர்ந்து அது இம்மாதம் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. நாட்டின் கடலுணவு இறக்குமதிகளில் ஏறத்தாழ 30 விழுக்காடு அளவை அத்துறைமுகம் கையாண்டு வருகிறது.

