சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைக்குத் திரும்ப தாங்கள் தயாராக இருப்பதாக திரையரங்கு நிறுவனங்கள் கூறியுள்ளன.
எனினும், கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வந்திருப்பது குறித்து சில திரையரங்க உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஷா திரையரங்கு இயக்குநரான திரு மார்க் ஷா, புதிய வழிகாட்டி நெறிமுறைகளைப் பூர்த்திசெய்ய தமது திரையரங்குகள் தயாராக இருப்பதாகக் கூறினார். சிங்கப்பூரில் ஒன்பது இடங்களில் ஷா திரையரங்குகள் இயங்குகின்றன.
"கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வந்திருப்பது குறித்து எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், இத்தகைய நடைமுறைகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படுவதற்கான காரணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது," என்றார் திரு ஷா.
மே 16 முதல் ஜூன் 21 வரை இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடைமுறை நடப்பில் இருந்தபோது திரையரங்குகளில் உணவு, பான விற்பனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் கடந்த மாதம்தான் விற்பனை மீண்டும் தொடங்கியிருந்தது.
திரையரங்குகளின் வருவாயில் உணவு, பான விற்பனை கிட்டத்தட்ட பாதியளவு அங்கம் வகிக்கும் நிலையில், அவற்றின் விற்பனைக்குத் தடை விதிப்பது லாபத்தைக் கணிசமாக குறைக்கும் என்று சில திரையரங்குகள் கூறுகின்றன.
இதன் காரணத்தால் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது செலவைக் குறைப்பதற்காக ஃபில்ம்கார்ட் சினிபிளேக்சஸ், தி புரோஜெக்டர் ஆகிய திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
சிங்கப்பூரில் கொவிட்-19 நிரந்தர நோயாகக் கருதப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் நடப்பிற்கு வந்திருப்பது ஏமாற்றம் தருவதாக தி புரோஜெக்டர் நிறுவனரான திருமதி கேரன் டான் குறிப்பிட்டார்.
நேற்று தொடங்கி ஆகஸ்ட் 18 வரை இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடைமுறை நடப்பில் இருக்கும்.
நிகழ்ச்சிக்கு முந்தைய பரிசோதனை அமல்படுத்தப்பட்டால் 100 பேர் வரை திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர். பரிசோதனை முறை இல்லாவிடில் 50 பேர் வரை மட்டும் அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூரின் ஆகப்பெரிய திரையரங்கு நிறுவனமான கோல்டன் வில்லேஜ் மல்டிபிளெக்ஸ், புதிய கட்டுப்பாடுகளுக்குத் தயாராக இருப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.
"கொவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளர்கள் நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம்," என்றார் அவர்.
"பல மாத தாமதத்திற்குப் பிறகு ஹாலிவுட் திரைப்படங்கள் இப்போது வெளியிடப்படுவதால், கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ள சூழலிலும் திரையரங்குகளில் அவற்றைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள் என நம்புகிறோம்," என்று அப்பேச்சாளர் சொன்னார்.

