பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளை மேம்படுத்தும் பாலர் பள்ளிகள்
இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைக்கு ஒத்துப்போகும் விதமாக தங்களது பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளை பாலர் பள்ளிகள் கடுமையாக்குகின்றன. சிங்கப்பூரில் தற்போது கிருமித்தொற்றுக் குழுமங்கள் அதிகரித்துள்ள வேளையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பள்ளியில் புதிதாக சேரும் பிள்ளைகளின் பெற்றோர் உட்பட அனைத்து பெற்றோரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் பெற்றோருக்கு அனுப்பிய தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
பாலர் பள்ளிகளுக்கு இடையிலும் பள்ளிகளுக்குள்ளும் கிருமித்தொற்றை குறைக்க, திறன் மேம்பாட்டு வகுப்புகள் இணையம் மூலம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலர் பள்ளியின் இயக்கத்திற்கு உதவும் வருகையாளர்களும் தேவையான வேலைகளைச் செய்வதற்காக வரும் குத்தகையாளர்களும் உரிமம் வழங்கும் அதிகாரிகளும் மட்டுமே பள்ளிகளுக்குள் நுழையலாம்.
கொவிட்-19 நாசித்திரவ சோதனைகளுக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்படும் குடும்ப உறுப்பினர்களைக்கொண்ட பிள்ளைகள் அல்லது பணியாளர்களுக்கு 'தொற்று இல்லை' என சோதனை முடிவுகள் காட்டும்வரை அவர்கள் கட்டாய விடுப்பில் வைக்கப்பட வேண்டும்.
மேலும் இரு சந்தைகள் மூடல்
கிளமெண்டி, வாம்போ ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளில் இரு புதிய கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவை.
மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்திலும் புதிய தொற்றுக் குழுமம் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கிளமெண்டி சந்தை மற்றும் உணவு நிலையத்தில் வேலை செய்தவர்கள் அல்லது அங்கு சென்று வந்தவர்களில் 22 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. வாம்போ டிரைவ் சந்தையில் 12 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
அங்கு கிருமிப் பரவலை முறியடிக்கவும் சந்தை வளாகத்தைத் தீவிரமாக சுத்தப்படுத்தவும் இரு சந்தைகளும் நேற்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த 14 நாட்களில் குறிப்பிட்ட சில சந்தைகள் மற்றும் உணவு நிலையங்களுக்குச் சென்றவர்களிடம் ஆன்டிஜன் விரைவு சுயபரிசோதனைக் கருவிகளை விநியோகிக்க மக்கள் கழகத்துடன் சேர்ந்து தாம் பணியாற்றி வருவதாக அமைச்சு கூறியது.
வாம்போ டிரைவ் சந்தை, 726 வெஸ்ட் கோஸ்ட் சந்தை அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள வசிப்போர்க் குழு நிலையங்களில் நேற்றும் இன்றும் சுயபரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூட தொற்றுக் குழுமத்துடன் நேற்று முன்தின நிலவரப்படி 11 பேருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த அமைச்சு, அங்கு கிருமிப் பரவக்கூடும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறியது.
அந்தச் சூதாட்டக்கூடம் நேற்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசோதனையை தான் நடத்தவிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

