இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைக்கு ஒத்துப்போகும் விதமாக தங்களது பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளை பாலர் பள்ளிகளும் மழலையர் பள்ளிகளும் கடுமையாக்குகின்றன. சிங்கப்பூரில் தற்போது பெரும் கிருமித்தொற்றுக்குழுமங்கள் உருவாகியுள்ள வேளையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பள்ளியில் புதிதாக சேரும் பிள்ளைகள், பள்ளி வளாகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஆரம்பநிலை பிள்ளைப்பருவ மேம்பாட்டு அமைப்பு பெற்றோர்களுக்கு அனுப்பிய தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. பாலர் பள்ளிகளுக்கு இடையிலும் பள்ளிகளுக்குள்ளும் கிருமித்தொற்றை குறைக்க திறன் மேம்பாடு வகுப்புகள் இணையம் மூலம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலர் பள்ளியின் இயக்கத்திற்கு உதவும் வருகையாளர்களும் தேவையான வேலைகளைச் செய்வதற்காக வரும் குத்தகையாளர்கள் உரிம அதிகாரிகளும் மட்டுமே பள்ளிகளுக்குள் நுழையலாம்.
கொவிட்-19 நாசித்திரவ சோதனைகளுக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்படும் பிள்ளைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பணியாளர்களுக்கு, சோதனையின் முடிவுகள் 'இல்லை' என வரும்வரை கட்டாய விடுப்பு விதிக்கப்படும்.

