கவனக்குறைவால் தீச்சம்பவத்தை உண்டாக்கிய ஆடவர்

2 mins read
8a96464e-d688-45fe-a497-deaa472cde99
-

குளிர் பதனப்பெட்டிகளைப் பழுதுபார்ப்பதற்காக அங் மோ கியோ போலிஸ் பிரிவு தலைமையகத்திற்குச் சென்ற கணேசன் சண்முகம், அங்கு புகைபிடித்தார். சிகரெட் துண்டை தாம் அணைத்துவிட்டதாக நினைத்த அவர், அங்கிருந்த குப்பையின் மீது அதை வீசினார். எனினும், அந்தக் குப்பையில் தீ மூண்டது. இதனால் $5,300க்கு மேல் சேதம் ஏற்பட்டது.

தமது கவனக்குறைவின் காரணமாக தீ மூண்டதாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இந்திய நாட்டவரான 30 வயது கணேசனுக்கு நேற்று முன்தினம் 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி 9ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் போலிஸ் தலைமையகத்தின் தரைத்தளத்தில் இருந்தபோது கணேசன் புகைபிடித்தார்.

"அந்த நேரத்தில் கனமழை பெய்துகொண்டிருந்ததால் வெளிப்புறப் பகுதிக்குச் சென்று புகைபிடிக்க குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வசதிப்படவில்லை. எனவே, மெயின் சுவிட்ச் அறைக்கு வெளியே புகைபிடிக்க அவர் எண்ணினார்," என்று அரசாங்க தரப்புத் துணை வழக்கறிஞர் சுனில் நாயர் நீதிமன்றத்தில் கூறினார்.

கணேசன் புகைபிடித்த பகுதியில் தீ மூண்டதாக 20 நிமிடங்கள் கழித்து ஆடவர் ஒருவர் கணேசனிடம் வந்து கூறினார். அந்த இடத்திற்கு விரைந்த அவ்விருவரும் தீயணைப்பான்களைக் கொண்டு தீயை அணைத்தனர். ஏதோ எரிவது போன்ற வாடையைக் கண்டறிந்த போலிஸ் அதிகாரி ஒருவர், தலைமையக வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார். மற்ற போலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தபோது கணேசனும் மற்றோர் ஆடவரும் குப்பை கூளத்தை அப்புறப்படுத்திக்கொண்டிருந்ததை கண்டறிந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், கணேசன் வீசிய அணைக்கப்படாத சிகரெட் துண்டே தீ ஏற்படக் காரணம் என்று கண்டறிந்தனர்.

கணேசனுக்கு $2,000 பிணை வழங்கப்பட்டுள்ளது. தண்டனையைத் தொடங்க ஜூலை 26ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவார்.