சிங்கப்பூரில் எரிபொருள் விலைகள் சாதனை அளவாக உயர்ந்துள்ளன. உலக அளவில் எண்ணெய் விலைகள் மீண்டு வருவதாலும் எரிபொருளுக்கான தீர்வை உயர்த்தப்பட்டதன் விளைவாகவும் இந்த விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது.
வியாழக்கிழமை பதிவான ஆக அண்மைய நிலவரப்படி, பிரபலமான 95-ஆக்டேன் ரக பெட்ரோல் லிட்டருக்கு $2.49என எஸ்பிசி எண்ணெய் நிரப்பு நிலையங்களிலும் $2.54 என கால்டெக்ஸ் மற்றும் ெஷல் நிலையங்களிலும் விற்கப்பட்டன. இது கழிவுக்கு முந்திய விலை.
அதேநேரம் பெரும்பாலான கார்கள் பயன்படுத்தும் 92-ஆக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டர் $2.47க்கும் $2.50க்கும் இடையில் விற்கப்பட்டது. இந்த ரக பெட்ரோல் கால்டெக்ஸ், எஸ்ஸோ மற்றும் எஸ்பிசி நிலையங்களில் மட்டும் விற்கப்படுகிறது. ஷெல் நிலையங்களில் விற்கப்படுவதில்லை.
98-ஆக்டேன் ரக பெட்ரோல் எஸ்பிசி நிலையங்களில் $2.98 ஆகவும் ஷெல் நிலையங்களில் $3.02 ஆகவும் விற்கப்பட்டது.
பிரிமியம் வகைையச் சேர்ந்த 98-ஆக்டேன் பெட்ரோல் லிட்டரின் விலை $3.12க்கும் $3.24க்கும் இடையில் இருந்தது. பெட்ரோல் விலைகள் இவ்வாறிருக்க, டீசல் விலையும் உயர்ந்துள்ளது. எஸ்பிசி எண்ணெய் நிரப்பு நிலையங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை $2.03 ஆகவும் கால்டெக்ஸ், ஷெல் நிலையங்களில் $2.06 ஆகவும் விற்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக இந்த விலைகள் அனைத்தும் கடந்த ஆறு மாதங்களில் 15 விழுக்காட்டுக்கும் அதிகமாக அல்லது லிட்டருக்கு 35 காசுகள் வரை உயர்ந்து இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளன.
இருப்பினும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தயாரிப்புகளின் விலைகளோடு ஒப்பிடும்போது இந்த உயர்வு கணிசமானது. பிரென்ட் ரக கச்சா எண்ணெய் கடந்த ஆறு மாதங்களில் பீப்பாய்க்கு 24 விழுக்காடு விலை உயர்ந்து 73.50 அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் செயல்பாடுகளோடும் விலை உயர்வு சம்பந்ததப்பட்டு உள்ளது. 92 மற்றும் 95-ஆக்டேன் ரக பெட்ரோலுக்கான தீர்வை வரியை கடந்த பிப்ரவரி மாதம் லிட்டர் 10 காசு என அரசாங்கம் உயர்த்தியது. அதேபோல 98-ஆக்டேன் எரிபொருளுக்கான தீர்வை 15 காசு உயர்த்தப்பட்டது.
கொள்ளைநோய் பரவல் மிகுந்த கடந்த ஆண்டில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க 'ஓபெக்' எனப்படும் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு முடிவெடுத்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயரத் தொடங்கியதாக சிங்கப்பூர் எண்ணெய் தொழில்துறை ஆலோசகரான ஓங் எங் டோங் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

