தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. எனினும், கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்ட விழிப்புநிலை நடப்பில் இருந்ததால் மறுவிற்பனை வீவக வீட்டுப் பரிவர்த்தனை குறைந்தது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனச் சொத்துச் சந்தை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். புதிய வீவக வீடுகளைக் கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப போதுமான புதிய வீவக வீடுகள் விற்பனைக்கு இல்லாதது அதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் மறுவிற்பனை வீவக வீடுகளின் விலை மூன்று விழுக்காடு அதிகரித்தது.
முதல் காலாண்டிலும் விலை அதே அளவு அதிகரித்தது. இரண்டாம் காலாண்டில் மறுவிற்பனை விலை 2.8 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மூன்று வாரங்களுக்கு முன் கணித்திருந்தது.
முதல் காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் சென்ற காலாண்டில் இடம்பெற்ற மறுவிற்பனை வீவக வீடுகளின் பரிவர்த்தனை 6.8 விழுக்காடு குறைந்தது. உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்ட விழிப்புநிலை நடப்பில் இருந்தபோது ஒரு வீட்டிற்கு தினமும் இரண்டு விருந்தினருக்கு மேல் செல்லமுடியாமல் இருந்தது. பரிவர்த்தனைகள் குறைந்ததற்கு இது ஒரு காரணம்.
எனினும், ஆண்டுக்காண்டு அடிப்படையில் மறுவிற்பனை வீவக வீடுகளின் பரிவர்த்தனை 106.1 விழுக்காடு அதிகரித்தது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தது இதற்குக் காரணம்.

