செய்திக்கொத்து

2 mins read
fdbb080c-3d4b-46d9-a27b-3128d89ac4f3
-

ஏர்ஏஷியா உணவு சேவை மந்தம்

ஏர்ஏஷியா விமான நிறுவனம் சிங்கப்பூரில் வழங்கிவரும் உணவு விநியோகச் சேவை இதுவரை சூடுபிடிக்கவில்லை. சுமார் நான்கு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட சேவை தினந்தோறும் சராசரியாக சுமார் 100 பரிவர்த்தனைகளை மட்டும் கையாள்கிறது என்றார் நிறுவனத்தின் உரிமையாளர் டோனி ஃபெர்னாண்டஸ்.

தொடக்கத்தில் சேவை மந்தமாக இருப்பது தான் எதிர்பார்த்ததுதான் எனச் சொன்ன அவர், தனது உணவு விநியோகச் சேவைக்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இனி ஏர்ஏஷியாயின் குறிக்கோளாக இருக்கும் என்றார்.

சில மாதங்களாக மட்டும் வழங்கப்பட்டுவரும் இந்தச் சேவை ஆகச் சிறந்ததாக இருக்கும் என்று தான் கணிக்கவே இல்லை எனத் திரு ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.

உணவு விநியோகச் சேவையில் முத்திரை பதித்துள்ள கிராப், ஃபூட்பாண்டா போன்றவை தொடங்கிய உடனேயே பல பரிவர்த்தனைகளைக் கையாளவில்லை, அதற்கு சில காலம் ஆகும் என்பதை அவர் சுட்டினார்.

சில்லறை வர்த்தக இடங்களின் வாடகை, விலை தொடர்ந்து சரிவு

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் சில்லறை வர்த்தக இடங்களுக்கான வாடகை, விலை இரண்டும் இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் தொடர்ந்து விழுந்தன.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் சில்லறை வர்த்தக இடங்களுக்கான வாடகை விகிதம், மத்திய வட்டாரத்திற்கு முதல் காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் சென்ற காலாண்டில் 0.5 விழுக்காடு குறைந்தது. இந்த விகிதம், முதல் காலாண்டில் பதிவான 4.4 விழுக்காட்டு வீழ்ச்சியைக் காட்டிலும் குறைவு.

மத்திய வட்டாரத்தில் சில்லறை வர்த்தக இடங்களுக்கான விலை விகிதம் சென்ற காலாண்டில் 2.8 விழுக்காடு மட்டுமே விழுந்தது. முதல் காலாண்டில் 3.2 விழுக்காடு வீழ்ச்சி பதிவானது.

தீவு முழுவதும், இரண்டாம் காலாண்டில் 419,000 சதுர மீட்டர் பரப்பளவிலான இடங்களைச் சில்லறை வர்த்தகர்கள் பயன்படுத்தினர். முதல் காலாண்டல் 428,000 சதுர மீட்டர் பரப்பளவிலான இடங்கள் பயன்படுத்தப்பட்டன.

அலுவலக இட வாடகை ஏற்றம்

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள அலுவலகங்களுக்கான வாடகை விகிதம், இந்த ஆண்டு முதல் காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் இரண்டாம் காலாண்டில் 1.3 விழுக்காடு அதிகரித்தது.

நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள இந்த விகிதம், முதல் காலாண்டில் 3.3 விழுக்காடு அதிகரித்தது. அதனுடன் ஒப்பிடுகையில் சென்ற காலாண்டு பதிவானது குறைவு.

மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள அலுவலக இடங்களுக்கான விலை விகிதம் இரண்டாம் காலாண்டில் 0.9 விழுக்காடு அதிகரித்தது. இது, முதல் காலாண்டில் 2.7 விழுக்காடு குறைந்ததிருந்தது.

தீவு முழுவதும் சென்ற காலாண்டில் சுமார் 697,000 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டன. முதல் காலாண்டில் பதிவான 761,000 சதுர மீட்டர் பரப்பளவைக் காட்லும் இது குறைவு.