செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
de695c31-956d-4f64-a242-a77789b7c872
-

$1.8 மி. வரி ஏய்ப்பு: நிறுவனத்திற்கு உதவியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏறத்தாழ $1.8 மில்லியன் மதிப்பிலான பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்ய 35 வயது ஆடவர் ஒருவர் தமது நிறுவனத்திற்கு உதவியதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு தொடர்பில் சேஃப்டி மரின் மேனேஜ்மண்ட் நிறுவனத்தின் ஒரே பங்குதாரரும் அதன் இயக்குநருமான லாவ் ஸென் ஸொவ் மீது நேற்று 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி தொடர்பில் 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பொய்த் தகவல்களை லாவ் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய கணக்குத் தணிக்கையாளர்களிடம் பொய்த் தகவல்கள் அளித்ததாகவும் லாவ் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

லாவ் $150,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 20ஆம் தேதி அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

ரயிலில் முகக்கவசம் அணியாதவர் வழக்கு விசாரணை கோருகிறார்

எம்ஆர்டி ரயிலில் கடந்த மே மாதம் முகக்கவசம் அணியாமல் காணப்பட்ட ஆடவர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அடுத்த மாதம் வழக்கு விசாரணை கோருகிறார். ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்காக பெஞ்சமின் கிளின், 40, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

பிரிட்டிஷ் நாட்டவரான அவர், கொவிட்-19 (தற்காலிக நடைமுறைகள்) சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

மே 7ஆம் தேதி இரவு 11.06 மணிக்கு 11.31 மணிக்கு இடையே ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்திலிருந்து ஹாலந்து வில்லேஜ் நிலையம் வரை எம்ஆர்டி ரயிலில் சென்றபோது கிளின் முக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

"நான் முக்கவசமே அணியமாட்டேன்," என்று அங்கிருந்தவர்களிடம் அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அங்கிருந்த பயணி ஒருவர் கிளின்னுக்கு முகக்கவசம் ஒன்றை வழங்கியும் அதை அவர் அணிந்துகொள்ள மறுத்துவிட்டார். அங்கிருந்த பயணி ஒருவருக்குப் பக்கத்தில் கிளின் அமர்ந்தபோது அந்தப் பயணி எழுந்துவிடும் காட்சி காணொளியில் பதிவானது.

அனைத்து வேலைகளையும் நிபுணத்துவமயமாக்கவும்: ரவி மேனன்

அனைத்து வேலைகளையும் நிபுணத்துவமயமாக்க, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) வேலைப் பிரிவு என்று வகைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.

"நம்மால் அந்த வேலைப் பிரிவை அவ்வாறு வகைப்படுத்துவதை நிறுத்த முடியவில்லை என்றால், அதிலிருந்து 'பி' (அதாவது நிபுணர்) என்று குறிப்பிடுவதையாவது நிறுத்த வேண்டும்.

"பிஎம்இடி வேலைகளை நாடிச் செல்வதை அனைத்து சிங்கப்பூரர்களும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்று நிலவும் எண்ணம் குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டும்," என்றார் அவர்.

"எந்தவொரு மக்கள்தொகையும் பல்வேறு திறன்களைக் கொண்டிருக்கும். பல வளர்ச்சி வாய்ப்புகள் மூலம் வெவ்வேறு வழிகளில் மக்கள் உன்னத நிலையை எட்ட முடியும். அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயமாகத் திகழ, ஏட்டுக்கல்வி எப்படியோ அதேபோல சமுதாய, தொழில்முறை திறன்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்," என்றும் திரு ரவி மேனன் சொன்னார்.