பாதசாரிகள் சாலையில் நடந்துசெல்வதை 73 வயது ஓட்டுநர் ஒருவர் கவனிக்கத் தவறினார். இதனால் முதியவர் ஒருவரை அவரது கார் மோதியது. காயங்கள் காரணமாக அந்த முதியவர் உயிரிழந்தார்.
சோ ஆ சூன் எனும் அந்த ஆடவருக்கு நேற்று இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கவனக்குறைவாக செயல்பட்டதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னதாக அவர் ஒப்புக்கொண்டார்.
2019 பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 8.10 மணியளவில் சிராங்கூன் அவென்யூ 2 வழியாக சோ வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்.
அப்பர் சிராங்கூன் சாலைக்கு அவர் திரும்பவிருந்தார். அங்கு பாதசாரிகள் கடப்பதற்கான 'ஸீப்ரா கிராசிங்' ஒன்று இருந்தது.
தமக்குப் பின்னால் வரும் வாகனங்களைக் காட்டும் கண்ணாடி மீது அப்போது சோவின் கவனம் இருந்தது.
'ஸீப்ரா கிராசிங்'கை பயன்படுத்திக்கொண்டிருந்த 72 வயது திரு சாம் செக் ஹோங் மீது வாகனம் மோதியது.
டான் டோக் செங் மருத்துவமனைக்கு திரு சாம் கொண்டு செல்லப்பட்டார். தலையிலும் முதுகெலும்பிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டது. 2019 மார்ச் 1ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
விபத்து நிகழ்ந்தபோது சோ சோர்வாக இல்லை என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

