சிங்கப்பூரில் ரொக்கமில்லா கட்டண முறையால் இளையர்கள் அளவுக்கு அதிகமாக செலவழிக்கும் போக்கு கவலைக்குரியது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய கொவிட்-19 சூழலில் பொதுவாக தொடர்பில்லா (contactless) கட்டண முறையும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
கடன் பற்று அட்டைகள், ரொக்கக் கழிவு அட்டைகள், பேவேவ், பேநவ் உள்ளிட்டவை அத்தகைய கட்டண முறையில் அடங்கும்.
ரொக்கமில்லா கட்டண முறை, மிதமிஞ்சிய அளவுக்கு செலவழிப்பதை ஊக்குவிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) வர்த்தகப் பள்ளி இணைப் பேராசிரியர் ஆங் சுவீ ஹூன் கருதுகிறார்.
"ரொக்கமில்லா கட்டண முறை மூலம் செலவழிக்கும்போது ரொக்கத்தைப் பார்க்க முடியாததால், பயனீட்டாளர் தங்களது செலவினத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடுகின்றனர்," என்று அவர் கூறினார்.
இதனால் தங்களை அறியாமலேயே அவர்கள் அளவுக்கு அதிகமாக செலவழிப்பதாக பேராசிரியர் ஆங் சொன்னார்.
ரொக்கமில்லா கட்டண முறையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் நிதி நிலவரத்தை நிர்வகிக்க முடியும் என சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக நிதிப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் ஆரோபிந்தோ கோஷ் சொன்னார்.
"எனினும், தனிநபர்கள் மிதமிஞ்சி செலவு செய்யவும் இத்தகைய கட்டண முறை வித்திடுகிறது. தங்களுடைய செலவினங்களைச் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும் இது தருகிறது," என்று பேராசிரியர் ஆங் கூறினார்.

