மரண தண்டனையிலிருந்து தப்பிய முருகன்; 12 ஆண்டு சிறைத் தண்டனை

மரண தண்டனையிலிருந்து தப்பிய முருகன்; 12 ஆண்டு சிறைத் தண்டனை

2 mins read
836baafd-f3da-4f73-8722-1b414a5824d1
-

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியரான எஸ்.கே. முருகன் சுப்பிரமணியத்துக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ததை அடுத்து, 2019ஆம் ஆண்டில் அதுகுறித்து மீண்டும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வாக்குமூலங்களை அனுமதிப்பதன் தொடர்பில் தனி விசாரணை நடத்தப்பட்டது. முருகனுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்க வழக்கறிஞர்கள் திருத்தியதை அடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதான பிறகு விசாரணையின்போது முருகன் அளித்த வாக்குமூலம் அவருக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து அரசாங்க வழக்கறிஞர்களும் தற்காப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். இதற்காக மட்டுமே 37 நாட்களுக்கு வழக்கு விசாரணை நீண்டது.

முருகன் அளித்த ஏழு வாக்குமூலங்களை அவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது என்று இம்மாத தொடக்கத்தில் நீதிபதி சான் செங் ஓன் தெரிவித்தார்.

அந்த வாக்குமூலங்களை அவர் சுயமாக முன்வந்து தந்தார் என்பதை அதிகாரிகளால் நிரூபிக்க முடியவில்லை என்றார் நீதிபதி சான்.

50 வயது முருகனுக்கு எதிராக குற்றச்சாட்டு திருத்தப்பட்டு அவருக்கு இம்மாதம் 16ஆம் தேதியன்று 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 9 கிராம் டயமோர்பினைக் கடத்தியதாக முருகன் ஒப்புக்கொண்டதற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

முருகனின் தண்டனைக்காலம் அவர் தடுப்புக் காவலில் முதன்முதலாக வைக்கப்பட்ட 2015ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாக எடுத்துக்கொள்ளப்படும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது

2018ஆம் ஆண்டில் கிரீன்விச் டிரைவில் முருகன் தமது சரக்கு லாரியை நிறுத்திவைத்திருந்ததாகவும் அதில் முகம்மது ஹிஷாம் முகம்மது ஹரஃபின் ஏறிக்கொண்டதாகவும் முருகனைக் கைது செய்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்த இடத்தை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே கண்காணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஹிஷாம் அதே நாளில் கடுமையான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

லாரிக்குள் வருவதற்கு முன்பே 2.5 கிலோ போதைப்பொருளை ஹிஷாம் வைத்திருந்ததாக முருகனைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

குறிப்புச் சொற்கள்