கொவிட்-19 நடைமுறைகளில் அண்மையில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்கள், சிங்கப்பூர் இரண்டாம் கட்டத் தளர்வுக்கு மீண்டும் திரும்ப வழிவிட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இது பொதுமக்களிடையே சில குழப்பங்களை ஏற்படுத்திவிட்டது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் அதிகரித்ததன் காரணமாக, இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது அமைச்சுகள்நிலைப் பணிக்குழு, சிங்கப்பூர் இன்னும் கடுமையான நடைமுறைகளுக்கு இம்மாதம் 22ஆம் தேதி மீண்டும் திரும்பும் என்று அறிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலைமையைப் பொறுத்து, ஐந்து பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம் என்ற புதிய அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருநாள் கழித்து இந்தக் கடும் நடவடிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமியுடன் வாழப் பழக்கப்படுத்திக்கொண்டு, மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்புவதில் சிங்கப்பூர் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
"சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீண்டும் பெறுவதற்கும், உலகத்துடன் சிங்கப்பூர் மீண்டும் தன்னை இணைத்துக்கொள்வதற்கும், நமது இளையர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்ப்பதற்கும் இதுதான் ஒரே வழி என்று முடிவு எடுக்கப்பட்டது.
"பிரிட்டன் மேற்கொண்ட வழியை சிங்கப்பூர் கடைப்பிடிக்காது. அது அண்மையில் ஒரே நேரத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.
"இஸ்ரேலும் நெதர்லாந்தும் தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவுடன் தொற்று எண்ணிக்கையும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவை இரண்டும் மீண்டும் தங்கள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கின. நமது அணுகுமுறை கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும், நாம் ஒரே நேரத்தில் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்தப் போவது இல்லை. அது பெரும் பிரச்சினையை உண்டாக்கிவிடும்," என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.

