54 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டனர்

2 mins read
6cfe4cd7-3283-4950-9694-6eba1a317edc
-

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் 54 விழுக்­காட்­டி­னர் இரண்டு 'எம்­ஆர்­என்ஏ' கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­னர். நாட்­டில் கொரோனா தடுப்­பூசி போடும் விகி­தம் ஒவ்­வொரு நாளும் ஒரு விழுக்­காட்­டுப் புள்ளி உயர்ந்து வரு­கிறது.

சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

தேசிய தின­வாக்­கில் ஏறக்­குறைய 70 விழுக்­காட்­டி­னர் இரு 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டி­ருப்­பர் என்­றும் செப்­டம்­பர் தொடக்­கத்­தில் அவ்­வி­கி­தம் 80 விழுக்­கா­டாக உய­ரும் என்­றும் திரு ஓங் கூறி­னார்.

"இதன்­மூ­லம், கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் அதி­க­மாக உள்ள நாடு­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் இருக்­கும். இது நம்மை கொவிட்-19 மீள்­தி­றன் சமூ­கம் என்ற வலு­வான நிலைக்கு உயர்த்­தும்," என்­றார் அமைச்­சர்.

இருப்­பி­னும், மூத்த குடி­மக்­கள், குறிப்­பாக 70 வய­தும் அதற்­கும் மேற்­பட்­ட­வர்­களில் பலர் இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது என்று அவர் சொன்­னார். இப்­போ­தைக்கு, அவ்­வ­ய­துப் பிரி­வி­ன­ரில் 70 விழுக்­காட்­டிற்கு மேற்­பட்­டோர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

ஆயி­னும், அதி­க­மான முதி­ய­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தடுப்­பூசி மையங்­களை நாடு­கின்­ற­னர் அல்­லது நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழு­வி­னர் மூலம் தடுப்­பூசி போட்டு வரு­கின்­ற­னர் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார். இந்த வழி­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் முதி­யோர் எண்­ணிக்கை கடந்த சில நாள்­களில் இரட்­டிப்படைந்துள்ளது என்­றும் அதா­வது கிட்­டத்­தட்ட 500லிருந்து 1,000க்கும் மேல் என்ற நிலையை எட்­டி­யுள்­ளது என்­றும் அவர் சுட்­டி­னார்.

ஒன்­பது குழு­வி­னர் முதி­யோ­ரின் வீடு­க­ளுக்கே சென்று தடுப்­பூசி போட்டு வரு­கின்­ற­னர் என்­றும் இம்­மா­தம் 23ஆம் தேதி­வரை அப்­படி 734 பேர்க்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

முதி­யோர்க்­குத் தடுப்­பூசி போட நட­மா­டும் தடுப்­பூசிக் குழு­வி­னர் புலாவ் உபி­னுக்­குச் செல்­வது போன்ற வேறு அணு­கு­மு­றை­களும் கையா­ளப்­ப­டு­வ­தாக அமைச்­சர் ஓங் சொன்­னார்.

முத­லில் தடுப்­பூசி போட இணங்கச் செய்து, தடுப்­பூசி போட்­ட­பின் உடல்­நி­லை­யைக் கண்­கா­ணிக்­கும் வகை­யில் ஒரு­நாள் முழு­தும் தங்­களது மருந்­த­கங்­களில் தங்­கும்­படி செய்து, தங்­கள் நோயா­ளி­களுக்கு உறு­தி­ய­ளிக்­கும் மருத்­து­வர்­கள் இருப்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"இது நாம் எத்­த­கைய சமூ­கத்­தி­னர் என்­பதை அள­வி­டு­வ­தாக உள்­ளது. மற்ற நாடு­களில் எதிர்­கொண்­டதை அல்­லது இன்­னும் எதிர்­கொண்டு வரு­வ­தைப்­போல, முதியோரிடத்தில் கொரோனா இறப்பு விகி­தம் அதி­க­மாக இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள நாம் தயா­ராக இல்லை என்­ப­தையே அவர்­களுக்­காக நாம் எடுத்­து­வ­ரும் இத்­த­கைய வியத்­தகு முயற்சி காட்டு­கிறது," என்­றார் திரு ஓங்.

இத்­த­கைய முயற்­சி­க­ளால், 70 வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோ­ரில் 77 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டு­விட்­ட­னர் என்­றும் இன்­னும் ஒரு மாத காலத்­தில் அவர்­கள் 2வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வர் என்­றும் அவர் சொன்­னார்.