வேலையிடத்தில் நியாயமான நடைமுறையை உறுதிசெய்ய முத்தரப்புச் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் கூறியுள்ளர்.
ஊழியர் அணியில் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவது, வேலையிடத்தில் நியாயமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வது ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதில் அளித்தார்.
வேலையிடத்தில் நியாயமான நடைமுறைகளை உறுதிசெய்ய சிங்கப்பூர் ஏற்கெனவே வைத்திருக்கும் நடைமுறைகளை சட்டங்களாக இயற்றுவதுதான் சிறந்த வழியா என்பது பற்றி முத்தரப்புக் குழு ஆராயும்.
"தவறு செய்யும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் கூடுதல் அதிகாரம் அளிக்கும். எனினும் சட்டம் இயற்றுவதால் மட்டும் வேலையிடத்தில் நியாயமான நடைமுறைகள் மேம் படாது," என்றார் டாக்டர் டான்.
தொழிற்சங்கங்கள், முதலாளிகள் உள்ளிட்ட பங்காளிகளுடன் கலந்து ஆலோசித்து, முத்தரப்புக் செயற்குழு அதன் பணியை அடுத்த ஆண்டு முதற்பாதிக்குள் முடிக்கும்.
முத்தரப்புச் செயற்குழுவின் இணைத் தலைவர்களாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ராபர்ட் யாப் இருவரும் செயல்படுவார்கள்.

