செய்திக்கொத்து

2 mins read
e6724dc9-c411-4c79-aba0-0fc8c6f345f0
-

பேருந்து நிலைய விபத்து விகிதம் சீராக உள்ளது

இரண்டு பேருந்துகள் இம்மாதம் மோதிக்கொண்ட புக்கிட் பாத்தோக் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் காணப்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் விகிதமும் பேருந்துப் போக்குவரத்துத் துறையில் காணப்படுவது போன்றே உள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை பேருந்துகள் சம்பந்தப்பட்ட 148 விபத்துகள் நிகழ்ந்தன. ஒப்புநோக்க, 2017ல் அதே காலகட்டத்தில் 270 பேருந்து விபத்துகள் நிகழ்ந்தன.

பேருந்து நிலையங்கள் மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் விபத்துக்கு உள்ளாகும் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக திரு சீ குறிப்பிட்டார். அவற்றின் ஆண்டு சராசரி விபத்து விகிதமும் அண்மைய அண்டுகளில் குறைந்துள்ளது என்றும் அவர் சொன்னார். விபத்துகள் பெரும்பாலும் மனிதத் தவறுகளின் காரணமாக நிகழ்வதாகச் சொன்ன அவர், வாகனங்கள் வருகின்றனவா என்று முறையாகக் கண்காணிக்காதது அல்லது வாகனங்களுக்கு வழிவிடாதது போன்ற தவறுகளை உதாரணமாகச் சுட்டினார்.

ஆனால் இம்மாதம் 11ஆம் தேதி இரண்டு டவர் டிரான்சிட் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் தவறு எங்கே என்று அவர் குறிப்பிடவில்லை.

கூடவே இருக்கும் கொரோனா: வர்த்தகங்கள் தயாராக வேண்டும்

கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளும் சூழலை நோக்கி சிங்கப்பூர் மாறும் வேளையில் இங்குள்ள வர்த்தகங்கள் அதற்குத் தயாராக வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

தகுதிபெறும் ஊழியர்கள் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள உதவுதல், விரைவு கிருமிப் பரிசோதனைகளை வேலை நடைமுறைகளில் ஒரு பகுதியாக சேர்த்தல், நீக்குப்போக்கான வேலைமுறையைத் தொடர்தல் ஆகியவற்றை வர்த்தகங்கள் செய்ய வேண்டும் என்று திரு கான் நேற்று தமது அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது கூறினார்.

பாதுகாப்புப் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது உணவு, பானம், அழகுநிலையம், உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றுக்கான தேவை அதிகமாகும் என்றார் அவர். அதிகமான ஊழியர்களும் வேலையிடத்துக்குத் திரும்பக் கூடும். தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத ஊழியர்களை அதிக நோய் தொற்று அபாயம் இல்லாத சூழல்களுக்கு முதலாளிகள் மாற்றவேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

ஐடிஇ மாணவர்கள் படிப்பை முடிக்க கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம்

குறைந்த காலத்தில் படிப்பை முடிக்கச் சிரமப்படும் ஐடிஇ மாணவர்கள், பாடங்களைக் குறைத்துக் கொண்டு கூடுதல் காலம் எடுத்து படிப்பை முடிக்க தெரிவு செய்யலாம் என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று ஆண்டுப் பாடத்திட்டத்தைச் சமாளிக்கச் சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு எவ்வாறு உதவும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மன்றத்தில் கேட்ட கேள்விகளுக்கு அவர் விடை அளித்தார்.

மாணவர்கள் வகுப்பில் பங்கெடுப்பது, கவனம் செலுத்தும் அளவு, தேர்வுகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு கூடுதல் உதவி தேவைப்படும் மாணவர்களை தொழில்நுட்பக் கல்விக் கழகம் விரைவாக அடையாளம் காணும் என்று டாக்டர் மாலிக்கி சொன்னார்.