செய்திக்கொத்து

3 mins read
3efbb0d1-57e1-4f8a-979b-ece28d2c316a
-

குற்றத்தை மறைக்க முயன்ற ஆடவருக்குச் சிறை

கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது தமது மூன்று நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்த புகைப்பிடித்து விதிமுறையை மீறினார் 27 வயது லியோன் சுவா யி யான்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதியன்று அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. விதிமீறல் குறித்து அதிகாரிகளுக்கு தெரியவரக்கூடாது என்பதற்காகத் தாம் அனுப்பிய குறுந்தகவல்களை நீக்கிவிடும்படி தமது மூன்று நண்பர்களிடமும் சுவா கூறினார்.

அந்தக் குறுந்தகவல்களை அதிகாரிகள் பார்த்தால் கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் இருந்தபோது நண்பர்களைச் சந்தித்தது வெளிச்சத்துக்கு வந்துவிடும் என சுவா அஞ்சியதால் அவ்வாறு செய்யச் சொன்னார்.

கொவிட்-19 தற்காலிக நடவடிக்கை சட்டத்தின்கீழ் தம்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் சுவா ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு வாரச் சிறையும் $15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபாரதத் தொகையை அவரால் செலுத்த முடியாமல்போனால் கூடுதலாக ஒன்பது வார சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். சுவாவின் மூன்று நண்பர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாதசாரியின் மரணத்துக்குக் காரணமான ஆடவருக்குச் சிறை

கவனக்குறைவுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டி சாலை விபத்தில் ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்த ஆடவருக்கு 12 வார சிறையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று சர்கிட் சாலையில் உள்ள உணவங்காடி நிலையத்துக்கு அருகில் உள்ள சாலையை 82 வயது திருவாட்டி ஹோர் ஆ போ கடந்து கொண்டிருந்தபோது அவர் மீது 29 வயது முகம்மது சாதிக் சயீது காதர் (படம்) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. விபத்தில் படுகாயம் அடைந்த திருவாட்டி ஹோர் பின்னர் மருத்துவமனையில் மாண்டார்.

திரு ஹோர் போக்குவரத்து விதிமுறைக்கு உட்பட்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததை அரசாங்க வழக்கறிஞர் சுட்டினார்.

தேசிய சேவைக்கான பதிவு

தேசிய சேவை பதி­வுச் சட்­டத்­தின்­படி, 2 ஜன­வரி 2004க்கும் 31 மார்ச் 2004க்கும் இடைப்­பட்ட காலத்­தில் பிறந்த எல்லா ஆண் சிங்­கப்­பூர் குடி­மக்­களும் ஆண் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­களும் தேசிய சேவைக்­குப் பதிந்­து­கொள்ள வேண்­டும்.

அவர்­கள் இம்­மா­தம் 28ஆம் தேதி (நாளை) முதல் 17 ஆகஸ்ட் 2021 வரைக்­குள், இணை­யம் வழி https://www.ns.sg எனும் முக­வ­ரி­யில் பதிவு செய்­ய­லாம். நேர­டி­யா­கப் பதிவு செய்ய விரும்­பு­வோர் எண் 3, டெப்போ ரோட்­டில் அமைந்­துள்ள மத்­திய ஆள்­ப­லத் தளத்­தில் பதிந்­து­கொள்­ள­லாம்.

பதிவு செய்­யும்­போது ஒவ்­வொ­ரு­வ­ரும் 22 செப்­டம்­பர் 2021 முதல் 19 அக்­டோ­பர் 2021 வரை ஏதா­வது ஒரு தேதி­யில் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட பதிவு செய்ய வேண்­டும். அந்­தக் குறிப்­பிட்ட தேதி­யில் மத்­திய ஆள்­ப­லத் தளத்­தில் காலை 8 மணி முதல் பிற்­ப­கல் 1 மணிக்­குள் மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­குச் செல்ல வேண்­டும்.

பிடிபடாமல் இருக்க குழந்தையை போலிஸ் மீது வீசியவருக்கு சிறை

போலிசாரால் தேடப்பட்ட ஆடவர் ஒருவர் அவர்களிடம் மாட்டிக்கொண்டபோது பிடிபடாமல் இருக்க தமது இரண்டு மாதக் குழந்தையை போலிஸ் அதிகாரி மீது வீசி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்தக் குழந்தை விழாமல் பிடித்துக்கொண்ட அதிகாரி, அதைத் தமது சக அதிகாரியிடம் கொடுத்து அந்த ஆடவரைத் துரத்தினார். அந்த ஆடவர் பிறகு கைது செய்யப்பட்டார். பெண் குழந்தை காயமின்றி தப்பியது. பெண் ஒருவரையும் குழந்தையையும் துன்புறுத்தியதற்காக அந்த 40 வயது ஆடவருக்கு 17 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.