பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்: 540 மாணவர்கள், ஆசிரியர்கள் உதவி கோரினர்

பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்: 540 மாணவர்கள், ஆசிரியர்கள் உதவி கோரினர்

2 mins read
3dd040b7-4e04-4005-9c84-01a2d3d38dbc
-

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் கொலை நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்குப் பிறகு அங்குள்ள 540 மாணவர்களும் ஆசிரியர்களும் மனநல உதவி கோரியுள்ளனர்.

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இன்று (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அதனைத் தெரிவித்தார்.

மனநல முதலுதவி, அதிர்ச்சியைச் சமாளித்தல் ஆகியவற்றில் பயிற்சிபெற்ற கல்வி அமைச்சின் 98 நிபுணர்கள் பள்ளிக்கு கூடுதல் உதவி அளித்தனர்.

அத்துடன், சம்பவம் நடந்த மறுநாளன்று உடனடி உதவியை நாடி பள்ளிக்கு வந்த பள்ளி ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவ 'கேர்' எனும் அவசர மனநல உதவி நிலையம் அமைக்கப்பட்டது.

அச்சம்பவம் ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியைத் தாண்டி வெளியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் ஜூலை 20ஆம் தேதி தாமும் கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் சிலரும் 350 பள்ளி முதல்வர்களைச் சந்தித்ததாக திரு சான் கூறினார்.

தொடக்கப்பள்ளிகள் முதல் தொடக்கக் கல்லூரிகள் வரையிலான பள்ளி முதல்வர்கள் அச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மன அழுத்தத்தோடு காணப்படும் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் தேவையான வளங்களைப் பெறும் வழிகள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இம்மாதம் 21ஆம் தேதி பள்ளி திறந்தபோது அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர்.

தேவையானவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களைத் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி ஆசிரியர்கள் ஊக்குவித்தனர்.

"முக்கியமாக, மாணவர்கள் முன்வந்து சிறிய செயல்கள் மூலம் பரிவு காட்டியது மகிழ்ச்சி அளித்தது," என்றார் திரு சான்.

அத்துடன், பள்ளி ஆலோசனைக் குழு, பெற்றோர், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் பள்ளிக்கு ஆதரவு அளித்ததாகவும் அவர் கூறினார்.