கையில் கோடரியுடன் காணப்பட்ட மாணவர் போலிசை அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்

கையில் கோடரியுடன் காணப்பட்ட மாணவர் போலிசை அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்

3 mins read
f6288a1a-ffa1-4331-a84f-c78df88a242f
இம்மாதம் 19ஆம் தேதி ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறும் போலிஸ் கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இம்மாதம் 19ஆம் தேதி, ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளியின் உயர்நிலை 4 மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்திலேயே உயர்நிலை 1ல் பயின்ற மாணவர் ஒருவரைக் கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 27) பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அந்நிகழ்வைக் காலவரிசைப்படி விவரமாகக் கூறினார். அதே வேளையில், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எல்லா விவரங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் அவர் சொன்னார்.

முற்பகல் 11.35 மணி

♦ நண்பகல் உணவு இடைவேளை முடியவிருந்த நேரத்தில், மாணவர்கள் சிலர் ஒரு கழிவறைக்கு வெளியே உயர்நிலை 4 மாணவர் ஒருவரைக் கண்டனர். கையில் கோடரி வைத்திருந்த அம்மாணவர், போலிசை அழைக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார். வகுப்பறைக்குத் திரும்பிய மாணவர்கள், அது பற்றித் தங்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

♦ அந்த உயர்நிலை 4 மாணவர், கழிவறையை அடுத்து இருந்த இன்னொரு வகுப்பு மாணவர்கள் சிலரிடமும் போலிசை அழைக்கும்படி கூறினார். 'ஓடு-மறைந்துகொள்-தகவல் தெரிவி' என்ற அவசரகாலப் பயிற்சியின்படி, அம்மாணவர்கள் உடனடியாக தங்களது வகுப்பறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டு, உதவிகோரி தங்களது வகுப்பு ஆசிரியர்களை அழைத்தனர்.

♦ நிகழ்விடத்திற்கு வந்துசேர்ந்த ஆசிரியர் ஒருவர், கோடரியைக் கீழே போடும்படி அம்மாணவரிடம் கூறினார். அதற்கு அம்மாணவரும் இணங்கினார். பின்னர் அவர் சந்திப்பு அறைக்குப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற ஆசிரியர்கள் போலிசுக்குத் தகவல் தந்துவிட்டு, கழிவறையைச் சோதித்தனர்.

♦ கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு அங்கு வந்து சேர்ந்த போலிஸ், அந்த 16 வயது மாணவரை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தனர். உயர்நிலை 1ல் பயின்ற 13 வயது மாணவர் ஒருவர் காயங்களுடன் கழிவறையினுள் சுயநினைவின்றிக் கிடந்ததை போலிஸ் அதிகாரிகளும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையினரும் கண்டனர். அம்மாணவர் இறந்துவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

♦ நிலைமை கட்டுக்குள் வந்ததும், மற்ற பணியாளர்களிடம் அந்தத் தகவலைத் தெரிவித்த பள்ளி முதல்வர், பின்னர் மாணவர்களிடமும் அதுபற்றிப் பேசினார். மிக மோசமானதொரு சம்பவம் பள்ளியில் நிகழ்ந்துவிட்டதாகக் கூறிய அவர், தங்கள் பெற்றோரைத் தொடர்புகொண்டு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறும்படி மாணவர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

♦ பின்னர் அந்நிகழ்வால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பள்ளி முதல்வர் பேசினார். 'பேரன்ட்ஸ் கேட்வே' எனும் தொடர்புச் செயலி மூலம் மோசமானதொரு சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக பெற்றோர்களுக்கும் அவர் தகவல் தெரிவித்தார்.

பிற்பகல் 3.15 மணி

♦ பள்ளியிலிருந்து மாணவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பேசுவதற்காக நுழைவாயில்களில் ஆசிரியர்கள் நிறுத்தப்பட்டனர்.

மாலை

♦ மாணவர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கள் குழந்தைகள் நலமுடன் உள்ளனரா என்று கண்காணிக்கும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மிகுந்த கவலையடைந்துள்ள மாணவர்கள் தங்களின் வகுப்பு ஆசிரியர்களைத் தொடர்புகொள்ளும்படி ஊக்குவிக்கப்பட்டனர்.

♦ அந்நிகழ்விற்குமுன் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்காததும் இணையம்வழி கோடரி வாங்கப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஜூலை 20

♦ அந்த 16 வயது மாணவர்மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மனநல மதிப்பீட்டிற்காக அம்மாணவர் இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.