மற்றவர்களுடான ஒப்பீடுகள் தொடர்ந்து நிகழ்ந்துவரும் இணையத்தால், சிக்கலான, அவசர உலகில் வாழும் இன்றைய இளையர்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் அதிகமாகி உள்ளன என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறி இருக்கிறார்.
ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த கொலை பற்றி நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
குடும்பம், சமவயதினருடனான உறவு, தங்கள்மீதும் பெற்றோர் மீதும் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், சிங்கப்பூரின் கடினமான கல்விமுறையைச் சமாளிப்பதில் உள்ள சிரமம் ஆகியவற்றில் ஏற்கெனவே அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள இளையர்களுக்கு இன்றைய சூழல் கூடுதல் சமூக அழுத்தத்தைத் தருவதாக திரு சான் குறிப்பிட்டார்.
தமது அறிக்கையில் இளையர்களின் மனநலத்துக்கு உதவ சிங்கப்பூர் கொண்டிருக்கும் அணுகுமுறையைப் பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார்.
மனநல உதவிக்கான முழுமையான கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் பரிவுடன் பேணி வளர்க்கும் சமூகத்தை உருவாக்குவதும் சிங்கப்பூரின் அணுகுமுறை என்று அவர் விளக்கினார்.
முன்னெச்செரிக்கைத் திட்டங்கள் முதல், ஆபத்தில் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு தலையிட்டு உதவி செய்யும் திட்டங்கள் வரை சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பலவகை உதவித் திட்டங்கள் நடப்பில் உள்ளதாக திரு சான் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு சகமாணவர்களே ஆதரவளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்கப்பட்டு வரும் கட்டமைப்புகள் அவற்றில் ஒன்று.
"மனஉளைச்சலில் உள்ள நண்பர்களுடன் அமர்ந்து, அன்பும் பரிவும் காட்டுவதோடு பெற்றோர், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் போன்ற நம்பகமான பெரியவர்களிடம் உதவிகேட்கும்படி அவர்களை ஊக்குவிக்க மாணவர்கள் அனைவரும் கற்றுக்கொள்வர் என்பது எங்களது நம்பிக்கை," என்று திரு சான் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் அனைவர்க்கும் ஆலோசனை வழங்குவதற்கான அடிப்படைத் திறன்கள் உள்ளதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைக் கண்காணித்து, ஏதேனும் சரியாக இல்லையென்று நினைத்தால் அவர்களை அணுகி, செவிமடுக்க வேண்டும் என்று சொன்னார்.
அத்துடன், சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்-ஆலோசகர்களையும் ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் பள்ளி ஆலோசகர்களையும் மாணவர்கள் அணுகலாம் என்றார் திரு சான்.
மாணவர்களை 'ரீச்' எனும் சமூக மனநல உதவிக்குழுக்கள் அல்லது மற்ற சமூக சேவை அமைப்புகளில் உள்ள நிபுணர்களிடம் உதவி பெறவும் பள்ளி ஆலோசகர்கள் அனுப்பலாம்.
அத்துடன், உயர்நிலை 1, 2 மாணவர்களுக்கு இவ்வாண்டு பண்புநலன், குடிமைக் கல்வி தொடங்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டினார்.
அதில், மனநலம் தொடர்பில் மாணவர்களின் புரிதலை அதிகப்படுத்த கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

