இவ்வாண்டு 'ஓ', 'என்', 'ஏ' நிலைத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள சில பாடங்களில் (சிஎல்டி) இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
சற்று அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டிறுதித் தேர்வுகளுக்கான பாடங்கள் குறைக்கப்படலாம்.
உருமாறிய 'டெல்டா' கொரோனா கிருமி எதிர்பார்த்ததற்கும் மேலாக பள்ளி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டமையால், தேர்வெழுதும் மாணவர்கள்மீது தமது அமைச்சு குறிப்பாக அக்கறை செலுத்தி வருவதாக திரு சான் கூறினார்.
விரைவாகவும் அதிகமானோரையும் தொற்றவல்ல 'டெல்டா' கிருமியால் அண்மைய மாதங்களாக கொரோனா பரவல் கூடியுள்ளது.
"'சிஎல்டி' எனும் அந்தப் பாடங்கள் ஏற்கெனவே பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தாலும், தேசிய அளவிலான தேர்வுகளில் இருந்து அவற்றை நீக்குவது, மாணவர்கள் தேர்வு அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்," என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு 'பிஎஸ்எல்இ' தேர்விலிருந்து 'சிஎல்டி' நீக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது. கொரோனா பரவல் காரணமாகச் சென்ற ஆண்டும் தேசிய அளவிலான தேர்வுகளில் இருந்து அந்தப் பாடங்கள் நீக்கப்பட்டன.
இதனிடையே, மாணவர்களில் பலரும் தங்களது கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொண்டிருப்பர் என்பதால் அடுத்த சில வாரங்களில் உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான இணைப்பாட நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன.
"தேசிய பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, இணைப்பாட நடவடிக்கைகளைப் பாதுகாப்பாக நடத்துவதற்காக எங்களது திட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறோம்," என்று திரு சான் கூறினார்.
அத்துடன், பள்ளிகளில் இப்போது 700க்கு மேல் உள்ள ஆசிரியர்-ஆலோசகர்களின் எண்ணிக்கையை அடுத்த சில ஆண்டுகளில் 1,000க்கு மேல் உயர்த்த கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.
இப்போது எல்லாப் பள்ளிகளும் குறைந்தது ஆலோசகர் ஒருவரைக் கொண்டுள்ள நிலையில், அப்பணியில் மேலும் பலரைச் சேர்க்க அல்லது தகுதியான கல்வியாளர்களை ஆலோசகர்களாகச் செயல்படும் வகையில் பொறுப்பை மாற்ற கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக திரு சான் தெரிவித்தார்.
உதவி தேவைப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு, ஆதரவு அளிக்கும் விதமாக ஆசிரியர்கள் அனைவர்க்கும் மனநலக் கல்வி தொடர்பில் கூடுதல் பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
ஒவ்வொரு தவணைக் காலத்தின் தொடக்கத்திலும் மாணவர்கள் நலமுடன் இருப்பதைச் சோதிக்க பிரத்தியேக நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

