கொவிட்-19 பரவல், பருவநிலை மாற்றம் போன்ற இடையூறுகளுக்கு நடுவில், சிங்கப்பூரின் கடல், கடலோரப் பொறியியல் துறையை துடிப்புமிக்கதாக வைத்திருக்க ஏதுவாக அதன் போட்டித்தன்மையை உயர்த்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது.
அத்துறைக்கான புதுப்பிக்கப்பட்ட உருமாற்ற வரைவுத்திட்டம் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
"புதுப்பிக்கத்தக்க கடலோர வளங்கள், கடலோர ஹைட்ரஜன் கப்பல் போக்குவரத்து ஆகியவை புதுப்பிக்கப்பட்ட உருமாற்ற வரைவுத்திட்டத்தில் வாய்ப்புள்ள துறைகளாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று அமைச்சர் டான் குறிப்பிட்டார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல், கடலோரப் பொறியியல் துறையின் பங்களிப்பு $3.6 பில்லியன், அதாவது 1%. 2016ஆம் ஆண்டில் அத்துறையில் 23,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினர்.
கரிம வெளியீடு அறவே இல்லை எனும் இலக்கை எட்டுவதற்கு உதவ புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த சிங்கப்பூர் திட்டமிட்டு வருவதாக டாக்டர் டான் சொன்னார்.
ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதும் அவற்றில் ஒன்று. அதே நேரத்தில், ஹைட்ரஜனைச் சேமிக்கவும் எடுத்துச் செல்லவும் செலவு அதிகம் என்பதையும் டாக்டர் டான் சுட்டிக்காட்டினார்.
"சிங்கப்பூர் தனது போட்டித்தன்மையைப் பேணுவதை உறுதிப்படுத்த, தொழில்நுட்ப, சந்தை மேம்பாடுகளை அரசாங்க அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
நிலமீட்புக்கான மண்துகள்களாக அல்லது கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தும் வகையில், கரியமில வாயுவைக் கழிவுசார்ந்த மூலப்பொருளாக அல்லது இயற்கைத் தாதுக்களாக மாற்றுவது குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

