அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் வளர்ச்சி காணவுள்ள விமானத் தொழில்துறை அம்சங்களைக் கைப்பற்ற சிங்கப்பூர் முயற்சி செய்வதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இத்துறையில் வளர்ச்சி காணக்கூடிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றைக் கைப்பற்ற அரசாங்கம் முயற்சி செய்கிறது என்றார் அவர்.
இந்த வளர்ச்சிப் பிரிவுகள் குறித்த விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என்றார் அவர். எனினும் அவை அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் வலுவாக மீட்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவை பொருளியல் வளர்ச்சிக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
எல்லைத் தடைகளை நீக்குவதில் தாமதம், கொவிட்-19 உருமாற்றக் கிருமிகளின் பரவல் போன்றவற்றால் விமானத் துறையின் மீட்சி தொடர்ந்து சிரமமானதாக உள்ள சூழலில் டாக்டர் டான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விமானத் துறை, சுற்றுலாத் துறைகளில் மனிதவளத் தேவை நிரந்தரமாகக் குறைக்கப்படுமா என்ற தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டெஸ்மண்ட் சூ எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கப்படவில்லை.
"இந்த நெருக்கடிநிலையில், கொள்ளைநோயிலிருந்து மீண்டு வருவதை உறுதிசெய்யும் முயற்சியில் இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட (வளர்ச்சி) பிரிவில், நம் திறன் தொகுப்பு கவனத்தைச் செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்," என்று டாக்டர் டான் கூறினார்.
போக்குவரத்து மையம் என்ற தகுதி, நம்பகத்தன்மை, ஊழியரணியின் வலிமை ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளும்போது சிங்கப்பூர் தொடர்ந்து காலூன்றக்கூடிய துறைகளில் இது ஒன்று என அமைச்சர் டான் சுட்டினார்.
இடைக்காலத்தில், விருந்தோம்பல் துறை உட்பட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள பலரும் புதிய வேலைகளைக் கண்டுபிடித்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். விமானப் போக்குவரத்து, விண்வெளி, விருந்தோம்பல் தொடர்பான படிப்புகளில் அண்மையில் பட்டம் பெற்ற மாணவர்களும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.
உள்ளூர்வாசிகளின் வேலை வாய்ப்புகளை மேலும் விரிவாக்கக்கூடிய நிறுவனங்கள், செப்டம்பர் மாதத்தில் காலாவதியாகவுள்ள வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் என நம்புவதாக டாக்டர் டான் கூறினார். இத்திட்டத்தின் கீழ், புதிதாக வேலையில் அமர்த்தப்படும் ஒவ்வொருவருக்கும் நிறுவனங்களுக்குத் தலா $54,000 வரை கிடைக்கும்.
"இது சக குடிமக்களையும் நிறுவனங்களையும் நல்ல நிலையில் வைத்திருக்கும் என்று நம்புகிறேன்," என்றார் அமைச்சர். சுகாதாரப் பாதுகாப்பு, நிதி, தகவல்தொடர்பு போன்ற வளர்ச்சித் துறைகளின் வேலைவாய்ப்புகளுக்கு பட்டதாரிகள் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காக உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் படிப்புகளை விரிவுபடுத்துகின்றன." என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

