மின்சார வாகனப் பதிவு அதிகரிப்பு
மின்சார வாகனங்களுக்கான பதிவு, சென்ற ஆண்டின் முதல் பாதியைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க விகிதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
தொடர்ந்து மின்சார வாகனங்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரிக்கும் என்று தம் அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார வாகனங்களுக்கு சிங்கப்பூரர்கள் மாறுவதை ஊக்குவிக்க, அரசாங்கம் பலதரப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தனியார் மருந்தகம் உட்பட
10 புதிய கொவிட்-19 குழுமங்கள்
குறைந்தது 10 புதிய கிருமித்தொற்றுக் குழுமங்களை சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது. அதில் ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள தனியார் மருந்தகம் ஒன்றும் அடங்கும். நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் இத்துடன் 35 கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த மாதத்தின் ஆக அதிக எண்ணிக்கை இதுவே.
தனியார் மருந்தகத்தின் தொடர்பில் மொத்தம் மூன்று கொவிட்-19 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கிடையே டெம்சியின் 'சாமி'ஸ் கறி' உணவகம் தொடர்பில் மேலும் ஒன்பது புதிய தொற்றுச் சம்பவங்கள் நேற்று முன்தினம் உறுதியாகின. இத்துடன் அக்கிருமித்தொற்றுக் குழுமத்தில் குறைந்தது 22 சம்பவங்கள் பதிவாகிவிட்டன.
'ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் குறைபாடுகள் களையப்படும்'
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததாகக் குறிப்பிட்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, துறைமுகம் மீண்டும் திறப்பதற்குள் இக்குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கிருமித்தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஆரம்பக்கட்ட ஆய்வில் சில குறைபாடுகள் தெரியவந்துள்ளன.
உதாரணத்திற்கு அவ்விடத்தில் ஊழியர்களால் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வேலை பார்ப்பது சிரமம். கிட்டத்தட்ட 120 கிலோ எடை வரையிலான மீன்கள், பனிக்கட்டிகள் நிறைந்த பெட்டிகளை அவர்கள் இங்குமங்குமாக நகர்த்த வேண்டியிருக்கும். இதனால் முகக்கவசத்தை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதற்குள் இதுபோன்ற குறைபாடுகள் களையப்படும் என்று உறுதியளித்தார் திருவாட்டி ஃபூ.

