பொதுத் துறையில் கடந்த ஆண்டு 108 தரவுக் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 44 விழுக்காடு அதிகம். 2019ஆம் ஆண்டில் பொதுத் துறையில் 75 தரவுக் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தரவுக் கசிவு சம்பவங்கள் அனைத்தும் தீவிரமானதல்ல என்று அரசாங்கத்தின் தனிநபர் தரவுப் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தரவுக் கசிவு சம்பவங்
களால் இலேசான அசௌகரியத்தையும் விரும்பத்தகாத விளைவுகளையும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம் கூறியது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த தரவுக் கசிவுகளால் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் சம்பவங்கள், பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் சம்பவங்கள், மரணம் அல்லது படுகாயம் விளைவிக்கும் சம்பவம், மிக மோசமான நிதி இழப்பு போன்றவை நிகழவில்லை.
இதுவரை இரண்டு தரவுக் கசிவு சம்பவங்களால் மட்டுமே மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு சம்பவங்களும் 2018ஆம் ஆண்டில் நிகழ்ந்தன.
அவற்றில் முதல் சம்பவம், சுகாதார அமைச்சின் எச்ஐவி பதிவகத்திலிருந்து கசிந்த தரவுகளாகும்.
அதன் விளைவாக 14,200 நோயாளிகளின் தனிநபர், ரகசிய விவரங்கள் வெளியாகின.
இரண்டாவது சம்பவம், அரசு நீதிமன்றத்தின் இணையக் கட்டமைப்பிலிருந்து கசிந்த 223 வழக்கு கள் பற்றிய விவரங்கள்.
பொதுத் துறையில் அதிகரித்துள்ள தரவுக் கசிவு சம்பவங்
களைப் போலவே தனியார் துறையிலும் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளன.
உத்தேச தனிநபர் தரவுக் கசிவு கள் குறித்து கடந்த ஆண்டில் 6,100 புகார்கள் செய்யப்பட்டன.
2019ஆம் ஆண்டில் தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திடம் 4,500 புகார்கள் செய்யப்பட்டன.
"கொவிட்-19 ஊழல் காரணமாக மின்னிலக்கப் பயன்பாடு அதிகரித்துள்ளது. தரவுக் கசிவு சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
"வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறையாலும் வீட்டில் பாதுகாப்பற்ற இணையக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதாலும் தரவுக் கசிவு சம்பவங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
"தனியார், பொதுத் துறைகள் எதிர்நோக்கும் ஆபத்தை இந்த நிலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தனிநபர் தரவுகளைப் பாதுகாக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம் தெரிவித்தது.

