அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னை அவர் நேற்று சந்தித்தார்.
இருவரும் இருநாடுகளுக்கு இடையிலான தற்காப்பு உறவை மறுஉறுதி செய்துள்ளனர்.
இணையப் பாதுகாப்பு, உத்திபூர்வத் தொடர்பு போன்றவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலையிலும் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவாக இருப்பது குறித்து இரு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர்.
புவிசார் அரசியல் மேம்பாடுகள், வட்டாரப் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தென்கிழக்காசியாவில் அமெரிக்கா தொடர்ந்து செயல்படுவது முக்கியம் என்று அமைச்சர்கள் இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற நான்கு நட்சத்திர ஜெனரலான திரு ஆஸ்டின் இன்று வரை சிங்கப்பூரில் இருப்பார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்லாகத்தின்கீழ் தென்
கிழக்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அமைச்சர் ஒருவர் வந்திருப்பது இதுவே முதல்முறை.
சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு திரு ஆஸ்டின் வியட்னாமுக்குப் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரிலிருந்து அவர் பிலிப்பீன்சுக்குச் செல்ல இருக்கிறார்.
பிரதமர் லீ சியன் லூங்கை திரு ஆஸ்டின் நேற்று சந்தித்துப் பேசினார்.