இந்து இளங்கோவன்
ஓய்வுபெற்ற மூத்த தமிழ் ஆசிரியர் திரு ஜான்சன் மாணிக்கம் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 96. மகன், மகள், 14 பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளை அவர் விட்டுச்சென்றார்.
இவர் மறைந்த முன்னோடி தமிழ் ஆசிரியரும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான திரு ஸ்டீபன் மாணிக்கதின் சகோதரர்.
கிட்டத்தட்ட 1950களில் தமிழ் கற்பிப்பதற்கு இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இவர், பீட்டி தமிழ் நிலையத்தில் தனது ஆசிரியர் பணியைத் துவங்கினார்.
தற்போதைய தமிழ் ஆர்வலர்கள், சமூகத் தலைவர்கள் பலருக்கு 50களில் தமிழ் கற்றுக்கொடுத்த பெருமை இவரைச் சேரும்.
தெலுக் ஆயர் தமிழ்மொழி நிலையம், பெக் சியா தமிழ்மொழி நிலையம் போன்ற அன்றைய தமிழ் நிலையங்களில் பணியாற்றியிருக்கிறார்.
திரு ஜான்சன் மாணிக்கம் 1980ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஒய்வுபெற்றார்.
"1970களிலிருந்து 1985 வரை பெக் சியா தமிழ்மொழி நிலையத்தில் அவருடன் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். தமிழிலும் தமிழ் இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை உடையவர் அவர். இளம் ஆசிரியர்களான எங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம்தான் கேட்டு தெரிந்துகொள்வோம்," என்று சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு சி. சாமிக்கண்ணு தெரிவித்தார்.
நல்ல இசை ஞானம் உடையவராகப் பலருக்கு பரிட்சயமான திரு ஜான்சன் வயலின் போன்ற இசை கருவிகளை விரும்பி வாசித்தார். திரு ஜான்சனின் மகள் திருமதி கேத்தரின் ஜெயசீலனும் பல ஆண்டுகள் தமிழ் கற்பித்து ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஆவார்.

