நெக்ஸ், சன் பிளாசா ஆகிய கடைத்தொகுதிகளில் டுரேஸ்டுகெதர் கருவிகளை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த சில மாதங்களில் இவை போன்று 100க்கும் மேற்பட்ட தானியங்கி இயந்திரங்கள் சமூக நிலையங்களிலும் குறிப்பிட்ட சில கடைத்தொகுதிகளிலும் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
டிரேஸ்டுகெதர் கருவிகளைப் பெற்றுக்கொள்ளவும் பழுதடைந்த டிரேஸ்டுகெதர் கருவிகளை மாற்றிக்கொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்கக் குழு நேற்று முன்தினம் தெரிவித்தது.
கொவிட்-19 சூழலில் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண இந்த டிரேஸ்டுகெதர் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொது இடங்கள், அலுவலகங்கள், கடைத்தொகுதிகள், பொதுமக்கள் அதிகம் இருக்கும் இடங்கள் ஆகியவற்றுக்குள் நுழைவதற்கு முன்பு டிரேஸ்டுகெதர் கருவியை ஸ்கேன் செய்ய வேண்டும்.
டிரேஸ்டுகெதர் கைபேசி செயலிக்குப் பதிலாக இந்த டிரேஸ்டுகெதர் கருவியைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு தானியங்கி இயந்திரத்திலும் 1,400 டிரேஸ்டுகெதர் கருவிகள் வரை வைக்கப்பட்டிருக்கும்.
முதல்முறையாக டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற்றுக்கொள்பவர்கள் தானியங்கி இயந்திரத்திலிருந்து அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.
டிரேஸ்டுகெதர் கருவி காணாமல் போகும் பட்சத்தில் தானியங்கி இயந்திரத்திலிருந்து மாற்று கருவியைப் பெற முடியாது.
நான்கு மாதங்களுக்கும் குறைவான டிரேஸ்டுகெதர் கருவிகள் பழுதடைந்தாலும் தானியங்கி இயந்திரங்களிலிருந்து மாற்று கருவியைப் பெற்றுக்கொள்ள முடியாது.
இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சமூக மன்றம் அல்லது குறிப்பிட்ட சில கடைத்தொகுதிகளுக்குச் சென்று புதிய கருவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
டிரேஸ்டுகெதர் கருவிகளைப் பெற வருவோருக்கு உதவவும் கருத்துகள் சேகரிக்கவும் தானியங்கி இயந்திரங்கள் அருகில் அறிவார்ந்த தேசத் தூதர்கள் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
தானியங்கி இயந்திரங்களிலிருந்து டிரேஸ்டுகெதர் கருவியை எடுக்க உதவும் அறிவார்ந்த தேசத் தூதர்கள்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

