செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
038191df-3bee-446e-ac60-2e16ce80a797
-

இனவாதக் கருத்து: ஆடவருக்கு

ஐந்து வாரச் சிறைத் தண்டனை

செங்காங் பொது மருத்துவமனையில் தாதி ஒருவருக்கும் பேரங்காடி காசாளர் ஒருவருக்கும் எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த ஆடவருக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று 52 வயது பெரியநாயகம் அப்பாவு (படம்) செங்காங் பொது மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனைக்கு வந்ததற்கான காரணத்தை தாதியரான திருவாட்டி கேத்தரின் லாம் வாய் சி கேட்டபோது, பெரியநாயகம் அவரை வசைபாடினார்.

தமக்கு ஏற்கெனவே சிகிச்சை அளித்த மருத்துவர்தான் வேண்டும் என்றும் தோல் நிறத்தைக் காரணம் காட்டி அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த இந்திய மருத்துவரின் சேவைகளை அவர் ஏற்க மறுத்தார்.

மூத்த தாதியர் முகம்மது ஃபைசுவான் அகமது ஜுவானைத் தாக்கியதையும் பெரியநாயகம் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இரவு

7.20 மணி அளவில் ரிவர்வேல் டிரைவ் வட்டாரத்தில் உள்ள பேரங்காடியில் பணிபுரிந்த காசாளரை பெரியநாயகம் வசைபாடினார்.

ஊழியர்களைப் பரிசோதனைக்கு அனுப்ப தவறியதாகக் குற்றச்சாட்டு

தனது ஊழியர்களை கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்ப தவறிய குற்றத்துக்காக சிங்கப்பூரில் முதன்முதலாக உற்பத்தி நிறுவனம் ஒன்றின்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி வெளிநாட்டு ஊழியர்களை ஒவ்வொரு 14 நாட்களுக்கும் கொவிட்-19 பரிசோதனைக்கு முதலாளிகள் அனுப்ப வேண்டும்.

இந்நிலையில், மூன்று வெளிநாட்டு ஊழியர்களை கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்ப பெஸ்கோட் உற்பத்தி நிறுவனமும் அதன் தலைமை மேலாளர் டான் சியூ லீயும் தவறியதாக நம்பப்படுகிறது.

"தங்குவிடுதிகளில் கிருமிப் பரவலுக்கான அபாயம் அதிகம் இருப்பதால் அங்கு தங்கும் ஊழியர்கள் கட்டாயம் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

என்று மனிதவள அமைச்சு கூறியது.

தகாத செயல்: மாணவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

கழிவறையைப் பயன்படுத்திய பல பெண்களை முறையற்ற வகையில் அவர்களுக்குத் தெரியாமல் காணொளி எடுத்த ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவனுக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

மின்தூக்கி, மின்படிகள் போன்ற இடங்களில் இருந்த பெண்களையும் 21 வயது ஜெரால்ட் சீ ஹொங் யாவ் முறையற்ற வகையில் காணொளி எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சிங்கப்பூரரான சீ ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.

சீயின் நன்னடத்தையை உறுதி செய்ய அவரது பெற்றோரிடமிருந்து $5,000 பிணைத் தொகை பெறப்பட்டுள்ளது. காணொளி மற்றும் படம் எடுக்கும் அம்சங்களுடனான கைபேசிகளை வைத்திருக்க சீக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நூல்

லாப நோக்கமற்ற அமைப்பான சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் வெளியிட்ட நூலில் மக்கள் தொடர்பு முக்கிய இடம்பெற்றள்ளது. 'வின்னிங் ஹார்ட்ஸ் அண்ட் மைன்ஸ்: மக்கள் தொடர்பு' எனும் தலைப்பு கொண்ட நூலில் அரசதந்திரிகள், ஆய்வாளர்கள், ஆசியானில் மக்கள் தொடர்புத் துறையில் நிபுணத்துவம் கொண்டவர்கள் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், 'ஆசியாவில் மக்கள் தொடர்பு' எனும் மாநாடு நாளை மறுநாள் வரை நடைபெறும். அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 40 மக்கள் தொடர்பு நிபுணர்கள் பங்கெடுக்கின்றனர்.

மாநாட்டை வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

மின்னிலக்க உலகில் உண்மையான தகவலுக்கும் பொய்ச் செய்திக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் அறிந்துகொள்ள தெளிவான, சீரான தகவல்கள் தேவை என்பதை மக்கள் தொடர்பு பற்றிய நூல் வலியுறுத்தியிருப்பதாக அவர் கூறினார்.