டெலிகிராமில் குழு ஒன்றை அமைத்து அதில் ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் வெளியிட்டதாக நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"சாம்ஸின் ஏராளமான 'CB' சேகரிப்பு" எனும் குழுவில் நிர்வாணப் படங்கள், அரைகுறையாக ஆடையணிந்த பெண்களின் படங்கள் மற்றும் பாலியல் செயல்களின் காணொளிகளும் இடம்பெற்றிருந்தன.
இதில் சம்பந்தப்பட்ட பெண்களின் அனுமதி பெறப்படவில்லை என்று போலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யீ விங் கே, 46, ஆன்டி வோங் மிங் ஜூன், 28, லிங்கன் ஆண்டனி பெர்னாண்டஸ், 30, டான் இயோவ் சோங், 40 ஆகிய நால்வர் மீது ஆபாசப் படங்கள் வைத்திருந்ததாகவும் அவற்றை அனுமதியின்றி வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.அவர்களில் திரு டான், தனது கணினி பதிவகத்தில் 17,219 ஆபாசக் காணொளிகளை சேகரித்து வைத்த குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.
வோங், ஃபெர்னாண்டஸ், டான் ஆகிய மூவரும் சிங்கப்பூரர்கள். மலேசியரான யீ, சிங்கப்பூர் நிரந்தரவாசி. 2019 அக்டோபர் 24ஆம் தேதி அந்த டெலிகிராம் குழு பற்றி புகார் வந்ததாக போலிசார் கூறினர்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி நால்வரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்தக் குழுவை மூவர் நிர்வகித்து வந்தது தெரிந்தது. நான்காவது நபர், ஆபாசப் படங்களை விற்க விளம்பர உத்தி களில் ஈடுபட்டார்.
இவ்வழக்கு ஆகஸ்டு 28ஆம்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே ஆபாசப் படங்கள் வெளியிடப்படும் உரையாடல் குழுவில் சேர வேண்டாம் என்று பொதுமக்களை போலிசார் கேட்டுக் கொண்டனர். அப்படிப்பட்ட குழுக்கள் பற்றி தெரிய வந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் போலிசார் கூறிஉள்ளனர்.

