சிங்கப்பூரின் தகுதி அடிப்படையிலான அணுகுமுறை இதுவரை நன்முறையில் செயல்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அது மேன்மேலும் குறுகிய வட்டத்துக்குள் ஒடுங்கி, கடுமையாகும் சாத்தியம் உள்ளது.
எனவே, தகுதி அடிப்படை மேம்படுத்தப்பட்டு சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கையும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்றார் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன்.
கொள்கை ஆய்வுக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனநாயகம், தகுதி அடிப்படை, சந்தை நிலவரம் ஆகியவற்றைக் காட்டிலும் வேறு சிறந்த மாற்று வழி இல்லையென்றாலும், அவற்றை அப்படியே விட்டுவிட்டால் சமூக அளவில் அவை பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கலாம் என்றார் அவர்.
தகுதி அடிப்படையை மேம்படுத்துவது தொடர்பில் மூன்று வழிகளை அவர் எடுத்துரைத்தார்.
அதை விரிவுபடுத்தி மேலும் பன்முகத்தன்மை கொண்ட மனிதத் திறன்களை அடையாளம் காண்பது, அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஒரு சில மாற்றங்களைச் செய்வது, சமுதாயமும் செல்வவளமும் ஒரு நபரின் வெற்றிக்குப் பங்காற்றுவதைப் புரிந்துகொண்டு பரிவு காட்டுவது ஆகியவையே அந்தமூன்று வழிமுறைகளாகும்.
பாடம் அடிப்படையில் தரம் பிரிக்கும் முறையை நோக்கிப் பள்ளிகள் சென்றுவிட்டாலும் பள்ளிகளைத் தாண்டி வேலையிடங்களிலும் தகுதி அடிப்படையிலான அணுகுமுறை வேண்டும் என்றார் திரு ரவி மேனன். பல நிறுவனங்களில் இன்னமும் கல்வித் தகுதி, பேட்டியின்போது அளிக்கும் பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் தரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நிறுவனத்திற்குத் தேவைப்படும் அம்சங்களாக அவை இருப்பதில்லை என்றார் அவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து செயல்படலாம் என்று தம் உரையின்போது திரு ரவி மேனன் குறிப்பிட்டார்.
இயற்கை விரும்பிகளாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நபர்களாக சிங்கப்பூரர்கள் மாற, தற்போதைய பருவநிலை மாற்றமே முக்கிய காரணமாகிவிட்டது.
அரசாங்கம் திட்டத்தை ஏற்பாடு செய்யும் என்று காத்திருக்காமல் மக்கள் தாங்களாகவே முன்வந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிகளைத் தேடவேண்டும். அதில் ஒன்று, இறைச்சி உண்பதைக் குறைப்பதாகும் என்றார் திரு ரவி மேனன்.
எரிசக்தியை அதிகம் பயன்படுத்தாத வழிகளை அனைவரும் தங்கள் இல்லப் பயன்பாடு மூலம் கண்டறிய வேண்டும் என்றார். நெகிழிகளைத் தவிர்ப்பது, குப்பைகளைக் குறைப்பது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றையும் அவர் உதாரணம் காட்டினார்.

