இணையத்தில் சட்டவிரோதமாக மின்-சிகரெட்டுகளையும் அதற்குத் தேவையான பாகங்களையும் விற்ற 13 பேர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது என்று சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
மார்ச்சுக்கும் ஜூனுக்கும் இடையில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 164,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் மின்-சிகரெட்டுகளில் வெளியாகும் நிக்கோடின் புகையை பயனீட்டாளர்கள் சுவாசித்து வெளிவிடுகின்றனர். சிகரெட் வடிவங்களிலும் இவை தயாரித்து விற்கப்படுகின்றன. இதில் சிக்கிய 13 பேரும் இருபது முதல் 40 வயது வரையிலானவர்கள்.
வெளிநாட்டு விநியோகிப்பாளர்களிடமிருந்து மின்-சிகரெட்டுகளையும் உதிரி பாகங்களையும் வாங்கி உள்ளூர் சமூக ஊடகங்களிலும் மின்-வர்த்தக தளங்களிலும் அவர்கள் விற்றுவந்தனர்.
இத்தகைய மின்-வர்த்தகத் தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய ஆணையம், இதுபோன்ற சட்ட விரோதப் பொருட்களை விற்பவர்கள் மீதும் வாங்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
இந்தச் சம்பவத்தில் 20,000 வெள்ளி மதிப்பிலான மின்-சிக ரெட்டுகள், இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில் மின்-சிகரெட் பாகங்களை விற்ற ஒருவரை, ஆணையத்தின் அதி காரிகள் ரகசியமாக செயல்பட்டு பிடித்துள்ளனர். 2019 மே மாதத்தில் சிங்கப்பூரரான 32 வயது மைக்கல் கோங் சூன் கீ, ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மறைமுக விளம்பரத்தைப் பார்த்து மின்-சிகரெட்டுகள் வாங்குவதைப் போல அவரை தொடர்புகொண் டனர். அப்போது லோரோங் 12 கேலாங்கில் உள்ள ஹோம்சூட் வியூ ஹோட்டலுக்கு அதி காரிகளை அவர் அழைத்துச் சென்றார். அங்கு மின்- சிகரெட்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டன. மைக்கலுக்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இது தவிர, இரண்டு மோசடி சம்பவங்களில் சிலரை ஏமாற்றி 3,000 வெள்ளி பறித்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள், மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.