தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய 36 வயது பெண் ஊழியர், தமது பதவியைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தின் 1.4 மில்லியன் வெள்ளிக்கும் மேலான தொகையை மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் டான் ஷு ஹான் எனும் அந்த முன்னாள் ஊழியருக்கு ஆறு ஆண்டு, ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மீது நம்பிக்கை மோசடி, சட்டம் தன் கடமையை செய்ய விடாமல் தடுத்தது, பொது அதிகாரியிடம் பொய் சொன்னது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
டான், 2019ல் காசநோய்க்கு எதிரான அனைத்துலக ஒன்றியம், நுரையீரல் நோய் ஆசிய பசிபிக் எனும் பதிவு செய்யப்பட்ட அறப்பணி அமைப்பில் நிதி மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
அறப்பணி அமைப்பின் சார்பில் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு வங்கிக்கணக்கு மூலம் பணம் அனுப்புவது அவரது வேலைகளில் ஒன்று.
இதற்காக சக ஊழியரான குத்ெபர்ட் சிங்க் என்பவரிடமிருந்து தொண்டு நிறுவனத்தின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கணக்கின் 'ஐபேங்கிங் டோக்கன்' சாதனத்தைப் பெற்றிருந்தார்.
ஆனால் வேலை முடிந்தும் அதனை அவர் திருப்பித் தரவில்லை. அது பற்றி கேட்டபோதெல்லாம் தான் மறந்து வீட்டில் வைத்துவிட்டதாக டான் மழுப்பி னார்.
2019 ஏப்ரல் 4ஆம் தேதிக்கும் ஜூன் 10ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கணக்கிலிருந்து 133 பரிவர்தனைகள் மூலம் பல கட்டங்களாக பல்வேறு தொகையை வேறு சில வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அதன் மதிப்பு சுமார் ஒரு மில்லியன் வெள்ளியாகும். ஆனால் அவரே மோசடி ஒன்றில் சிக்கி அவற்றில் 797,000 வெள்ளியை இழந்துள்ளார். எஞ்சிய பணத்தை தமது சொந்த செலவுக்கும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கவும் கடனை அடைக்கவும் அவர் பயன்படுத்தினார். தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்தும் அவர் 322,000 யுஎஸ் டாலரை எடுத்துள்ளார்.
இந்தப் பணத்தையும் அவர் சொந்த செலவுக்கும் மோசடிக் காரியங்களுக்கும் பயன்படுத்தினார்.
'ஐபேங்கிங் டோக்கன்' சாதனத்தைத் திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும் தராததால் கவலையடைந்த திரு சிங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கணக்குகளை சரி பார்த்தார். அப்போதுதான் டானின் தில்லு முல்லு தெரிய வந்தது. 2019 ஜூன் 20ஆம் தேதி டானை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தன. போலிசார் அவரிடமிருந்து 225,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கத்தை யும் ஆடம்பரப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.

