கூடைப்பந்து அசம்பாவிதத்தில் உயிரிழந்த இளையரின் தாயார்: நல்ல பையன், சொர்க்கம் செல்வான் என நினைக்கிறேன்

கூடைப்பந்து அசம்பாவிதத்தில் உயிரிழந்த இளையரின் தாயார்: நல்ல பையன், சொர்க்கம் செல்வான் என நினைக்கிறேன்

2 mins read
c9765ebe-b2bb-4a5b-b427-46c52d954155
கூடைப்பந்து வலைக் கம்பம் விழுந்து திருவாட்டி ரஹிமாவின் 17 வயது மகன் முகம்மது ரிட்வான் உயிர் இழந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

பிடோக்கில் கூடைப்பந்து வலைக்கம்பம் ஒன்று இளைஞர் மீது விழுந்ததில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த தம் மகன், நல்ல பையன் என்றும் அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் என்று தாம் நினைப்பதாகவும் இளையரின் தாயார் 62 வயது திருவாட்டி ரஹிமா லீ அப்துல்லா உருக்கமாகக் கூறினார்.

கூடைப்பந்து விளையாடிவிட்டு இரவு 11 மணிவரை தம் அறையில் பாடிக்கொண்டும் இசை வாசித்துக்கொண்டும் நண்பர்களுடன் மடிக்கணினி வழி விளையாடிக்கொண்டும் இருப்பது 17 வயது முகம்மது ரிட்வானுக்கு வாடிக்கை.

ஆனால் திங்கட்கிழமை முதல் அந்தச் சத்தம் அடங்கிவிட்டது. அன்றிரவு ஒன்பது மணியளவில் போலிசார் வீட்டுக் கதவைத் தட்டினர். மகனுக்கு நேர்ந்ததைப் பற்றி திருவாட்டி ரஹிமாவிடம் கூறினர்.

"நான் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். என் மகனுக்காக மட்டுமே வேலை செய்து வந்தேன். இப்போது நான் யாருக்காக வேலை செய்வது என்று தெரியவில்லை," என்று மனமுடைந்துபோய் கண்ணில் நீர் நிரம்பியவாறு கூறினார் அந்தத் தாயார்.

பிடோக் சவுத் ரோடு புளோக் 18 அருகில் அமைந்துள்ள கூடைப்பந்து கூடத்தில் ரிட்வான் தம் நண்பருடன் விளையாடிக்கொண்டிருந்தபோது வலைக்கம்பம் அவர் மீது விழுந்தது. சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரிட்வான், பின்னர் உயிரிழந்தார். இறப்புச் சான்றிதழில் இளைஞரின் உயிரிழப்புக்குத் தலை காயம் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விமானியாக வேண்டும் என்பது தம் மகனின் கனவு என்று திருவாட்டி ரஹிமா பகிர்ந்துகொண்டார். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (மத்திய கல்லூரி) பயின்று வந்த ரிட்வான், நல்ல மதிப்பெண்கள் பெறுபவர் என்றும் அவர் கூறினார்.

துணைப் பிரதமரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி எம்பியுமான ஹெங் சுவீ கியட் செவ்வாய்க்கிழமையன்று ரிட்வானின் குடும்பத்தாரைச் சந்தித்துத் தம் அனுதாபங்களைத் தெரிவித்தபோது இச்சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

காரணத்தைக் கண்டுபிடிக்குமாறு தாமும் கேட்டுக்கொண்டதாக அந்தத் தாயார் குறிப்பிட்டார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் புதிய வலைக்கம்பம் பொருத்தப்பட்டதாக அறியப்படுகிறது.