உண்மையற்ற செய்தி; எழுதியவரின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பும் அமைச்சர்

உண்மையற்ற செய்தி; எழுதியவரின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பும் அமைச்சர்

2 mins read
eb58f1e5-c448-40a2-a9a2-b5ea2bdb1ce9
ASIA.NIKKEI.COM எனும் இணையப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் -

கேடிவி கொவிட்-19 குழுமத்தைப் பற்றி உண்மையற்ற செய்தியை எழுதியவரின் நோக்கம் குறித்து சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் காணொளிகளைப் பகிர்ந்துகொண்ட டெலிகிராம் குழுவில் தொடர்புடையவர் என்று அந்த அறிக்கையை எழுதிய ஆண்டி வோங் மிங் ஜுன் மீது ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டிருப்பதை அமைச்சர் சண்முகம் சுட்டினார்.

"அவர் மீது குற்றம் சுமத்தியிருப்பதால் அவர் இந்தப் பொய்ச் செய்தியைப் பதிவிட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. அவர் எழுதிய அறிக்கையை நிக்கெய் பதிவேற்றம் செய்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது," என்று திரு சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த அறிக்கை இம்மாதம் 23ஆம் தேதியன்று நிக்கெய் ஆசியா இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கேடிவி கொவிட்-19 குழுமத்தில் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் விபசாரத்தால் ஏற்படும் தீமைகளை இந்தக் குழுமம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எவ்வித விளக்கமும் தராமல் மீண்டும் இயங்க கேடிவி விடுதிகளுக்குக் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியதற்கான காரணம் குறித்து அறிக்கை கேள்வி எழுப்பியது.

குடும்ப உறவு எனக் கூறிக்கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்கு வர குடிநுழைவுக் கொள்கையில் குறைபாடு இருப்பதாக அறிக்கை குறைகூறியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை உள்துறை அமைச்சின் கூட்டு முயற்சிக் குழுவின் திரு சேம் டீ மறுத்தார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள் துல்லியமற்றவை என்றார் அவர்.

பாலியல் தொழிலில் ஈடுபட சில வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்கு வர முயற்சி செய்வது அதிகாரிகளுக்குத் தெரியும் என்றார் திரு சேம் டீ.

இதற்குச் சிங்கப்பூரின் குடிநுழைவுச் சட்டம் இடம் தருவதில்லை என்றார் அவர்.

இத்தகையோர் சிங்கப்பூருக்கு வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அனைவரையும் தடுத்திட முடியாது என்று திரு டீ கூறினார்.

"அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை உள்துறை அமைச்சு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அறிக்கையை எழுதியவரின் உயர் நெறிமுறை எதிர்பார்ப்புகள் பாராட்டத்தக்கவை. இருப்பினும், உண்மையை அவர் எழுத வேண்டும், உண்மை என்று நினைத்துக்கொண்டு கற்பனைக் கதைகளை எழுதக்கூடாது," என்றார் அமைச்சர் சண்முகம்.